PMK Founder Ramadoss met PM Modi in Delhi: பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகனும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இருவரும் பிரதமர் மோடியை டெல்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மத்திய அரசின் நீட் தேர்வு, எட்டுவழிச்சாலை ஆகிய விவகாரங்களில் மத்திய அரசை விமர்சித்து வந்த நிலையில், கடந்த மக்களவை பொதுத்தேர்தலில் பாமக அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்தாலும் பொதுத்தேர்தலுடன் நடைபெற்ற 18 சட்டமன்ற தொகுதிகலுக்கான இடைத்தேர்தலில் அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கு தேவையான அளவு தொகுதிகளை வெற்றி பெற்றது. இதனால், கூட்டணி ஒப்பந்தப்படி, பாமகவின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தெர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தலில் பாமக அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியை தொடர்ந்து வருகிறது. அதே போல, பாஜகவும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியை உறுதி செய்துள்ளது. அதே போல, தமிழ்கத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸும், அன்புமணியும் திடீரென டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் நோக்கம் பற்றியும் சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்று எதுவும் தகவல்கள் வெளியாவில்லை. இந்த சந்திப்பு பிரதமருடனான மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமருடனான சந்திப்பை ராமதாஸ் தனது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதே போல, பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் மூத்த தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்புமணியும் பிரதமர் மோடியை சந்தித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரும் டெல்லி சென்று பிரதமரை திடீரென சந்தித்திருப்பது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.