மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக முதல்வர் நிவாரண உதவிகள் வழங்கியதற்கு, பா.ம.க., கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மாண்டஸ்' புயலாக உருவெடுத்து, நேற்று (டிசம்பர் 9ஆம் தேதி) சென்னையை கடந்து நள்ளிரவு மாமல்லபுரம் வழியாக கரையை கடந்தது.
இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், மரங்கள் உடைந்து பாதைகளை மறைத்தபடி கிடப்பது, சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பது, பல்வேறு இடங்களில் மக்கள் வீட்டுக்குள்ளே மழைநீர் வருவது என்று பாதித்துள்ளது.
இதனால் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் நிலையையும் நகரில் உள்ள சூழலையும் ஆய்வு செய்ய களத்திற்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கினார்.
இதற்கு பா.ம.க., கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
"தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது. பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடைந்துள்ளனர்!
புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன. மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை. அதற்காக பாராட்டுகள்!
நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதைப் போன்றே கிராமப்பகுதிகளிலும் புயல் பாதிப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை வழங்கப்பட வேண்டும். வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்!
திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடலோரப்பகுதிகளில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், மீனவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்!" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக அரசின் இந்த முன்னேர்ச்சரிக்கல் நடவடிக்கைகளை பார்த்து மக்கள் தங்களது சமூக வலைத்தளங்களின் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.