பாமகவுக்கு என்ன ஆனதோ தெரியவில்லை.. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், ஒன்று தங்களை மறந்து உளறி விடுகின்றனர், அல்லது தெரிந்தே உளறுகின்றனர். சமீபத்தில் தேர்தல் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய அன்புமணி, ''பூத்தில் நாம்தான் இருப்போம்" என்று சொல்லி பரபரக்க வைக்க, தற்போது ராமதாஸ் பேசியது கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆறுமுகம் மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து, திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று முன்தினம் மாலை பொதுக்கூட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய ராமதாஸ் "அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்ற கூட்டணியாக நமது கூட்டணி விளங்குகிறது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தற்போது, கூட்டணி அமைத்து அதிக பலத்துடன் தேர்தலைச் சந்திக்கிறது. இதன்மூலம், அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிக அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
திமுக தலைவர் ஸ்டாலினின் செயல்பாடு அனைவருக்கும் தெரியும். ஸ்டாலின் ஆளுமைத் திறனற்றவர். திமுக தற்போது கார்ப்பரேட் நிறுவனமாக உள்ளது. வேறு கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்கள், அக்கட்சியின் ஆலோசகர்களாக உள்ளனர்.
திருப்போரூர் தொகுதியில் மீனவ சமுதாய மக்களின் சார்பில் 30 ஆயிரம் வாக்குகள் உள்ளன. மீனவர்கள் அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க மாட்டார்கள். அதனால், தேர்தல் சிறப்பாக பணியாற்றி அதிமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் எனக்கூறினார். இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களில் சுதாரித்த ராமதாஸ், திமுக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்'' என்று சமாளித்தார்.