/indian-express-tamil/media/media_files/2025/08/01/pmk-general-body-meeting-ramadoss-anbumani-announce-dates-places-tamil-news-2025-08-01-21-14-17.jpg)
பா.ம.க-வில் உச்சக்கட்ட மோதல்: கட்சி உரிமை கோரி ஐகோர்ட்டில் ராமதாஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல்
கடந்த 2024 டிசம்பரில் விழுப்புரத்தில் நடந்த பா.ம.க. சிறப்பு பொதுக் குழுக்கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தனை இளைஞர் பிரிவு தலைவராக அறிவித்தார். இதற்கு உடனடியாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆட்சேபனை தெரிவித்ததில் இருந்து, தந்தை மகன் இடையே மனக்கசப்பு தொடங்கியது. அதன்பிறகு கடந்த மே மாதம் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய ராமதாஸ், பா.ம.க-வில் குழுக்கள் உருவாகிவிட்டதாக, அன்புமணி மீது மறைமுக தாக்குதலை தொடங்கி, அதன்பின்னர் செயல் தலைவராக அன்புமணியை அறிவித்தும், தலைவராக நானே இருப்பேன், சட்டமன்ற தேர்தல் தொடர்பான முடிவுகளை நானே எடுப்பேன் என்றும் அறிவித்தார்.
தந்தை ராமதாஸ் என் மீது கோபமாக இருந்தால், அவரிடம் மன்னிப்பு கேட்பதில் தயக்கமில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தும், சமரசம் செய்யத் தயங்கிய ராமதாஸ், தன் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என அறிவித்தார். இதன்பிறகு ராமதாஸ்-அன்புமணி தரப்பில் கட்சியின் பழைய நிர்வாகிகள் நீக்கம், புதிய நிர்வாகிகள் நியமனம் என தொடர் அறிவிப்புகள் வெளிவந்தன.
கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அன்புமணி பொதுக்கூட்டங்கள் மற்றும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வரும் நிலையில், மறுபுறம் ராமதாஸ் மாவட்ட செயலாளர்களைக் கூட்டி ஆலோசனை நடத்துவதுடன், அன்புமணியின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். கடந்த ஆக.18-ம் தேதி புதுச்சேரியில் ராமதாஸ் தனது ஆதரவாளர்களுடன் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு பதிலளித்த அன்புமணி தரப்பினர், ராமதாஸ் நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அதற்கும் பாமகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ராமதாஸ் நியமித்த பொதுச்செயலாளர் முரளி சங்கர் மற்றும் சமூக நீதிப் பேரவையின் மாநிலத் தலைவர் வி. எஸ்.கோபு ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், பா.ம.க. தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்புமணி தரப்பிலிருந்து கட்சியின் உரிமை அல்லது மாம்பழச் சின்னத்திற்கு உரிமை கோரி ஏதேனும் வழக்கு தொடர்ந்தால், அதுகுறித்து தங்கள் தரப்பின் கருத்தைக்கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, அன்புமணி தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.