எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அதிமுக கூட்டணியில் இணைந்த பாமக 7+1 என்ற கணக்கில் சீட் பெற்றுள்ளது. இதனால், பாமக தலைமை உற்சாகத்தில் இருந்தாலும், பெருவாரியான தொண்டர்களின் மனநிலை என்பது சஸ்பென்சாக உள்ளது.
ஏனெனில், இனி எக்காலத்திலும் திராவிட கழகங்களுடன் கூட்டணி கிடையாது என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், ஆளும் அதிமுக அரசை மிகக் கடுமையாக விமர்சிப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தவர் ராமதாஸ். தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்குந்த அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதிலும், 1 மாநிலங்களவை சீட் பெற்றது ராமதாஸின் மெகா மூவ் என்கின்றனர்.
பாஜக எதிர்ப்பு மனநிலை தமிழகத்தில் நிலவி வரும் சூழலில், பாஜகவுடன் கைக்கோர்த்துள்ள அதிமுக தலைமையிலான அணியில் பாமக இணைந்து இருப்பது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகுறது. இருப்பினும், அரசியல் எனும் களத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் சர்வ சாதாரணம் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், முதல்வர், துணை முதல்வர்,அமைச்சர்கள் உட்பட முக்கிய தலைவர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தடபுடலாக நேற்று (பிப்.22) விருந்து வைத்திருக்கிறார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தைலாபுரம் தோட்டத்துக்கு வந்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரை ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தியும் மலர் கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
/tamil-ie/media/media_files/uploads/2019/02/a675-300x217.jpg)
இந்த விருந்தில் சுமார் 80 வகையான சைவ, அசைவ உணவுகள் பரிமாறப்பட்டதாம். விருந்து முடிந்த பிறகு, பாமக போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றதாகவும், அது குறித்த பட்டியல் முதல்வரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும், தொகுதி லிஸ்ட்டில் அதிமுக தலைமைக்கு முழு திருப்தி என்றும் தெரிகிறது.
தவிர, விருந்து முடிந்த பிறகு முதல்வர் 'மொய்' வைக்காமல் வந்திருப்பாரா என்றும் கேள்வி எழுப்புகின்றனர் விவரம் அறிந்தோர். மொத்தத்தில் இனிப்பு, காரம், மொய் என பக்கா கமர்ஷியல் விருந்தாக இது அமைந்திருக்கிறதாம்.