பா.ம.க நிறுவனத் தலைவர் ராமதாஸ் - மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த டிசம்பரில், பா.ம.க இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் அறிவிக்க, அதற்கு மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி. அதன்பிறகு, கடந்த ஏப்ரல் மாதம் திடீரென செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அதிரடியாக அறிவித்தார்.
இதன்மூலம் பாமகவில் ராமதாஸுக்கும் அன்புமணிக்கும் இடையே பிளவு ஏற்பட்டு இருப்பது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. பா.ம.க வன்னியர் சங்க மாநாட்டில் அன்புமணி ராமதாஸை மறைமுகமாக விமர்சனம் செய்து ராமதாஸ் பேசியிருந்தார். இதற்கு அடுத்தடுத்து கட்சிக்குள் குழப்பங்கள் ஏற்படத் தொடங்கின. ராமதாஸ் தானே நிறுவனத் தலைவர் என்று தெரிவிக்க, அன்புமணியோ தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தானே தலைவராக செயல்படுவேன் என்று அறிக்கை விட்டார்.
அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை ராமதாஸ் பொறுப்பில் இருந்து நீக்கி புதியவர்களை நியமித்டு வருகிறார். ஆனால், அவர்கள் அதே பதவியில் தொடர்வார்கள் என அறிவிக்கும் அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் ஆதரவாளர்களை பொறுப்பில் இருந்து நீக்குகிறார். ராமதாஸுக்கு ஆதரவாக ஜி.கே.மணி, தீரன், பு.தா.அருள்மொழி, எம்எல்ஏ அருள் உள்ளிட்டோர் உள்ளனர். அன்புமணிக்கு ஆதரவாக வடிவேல் ராவணன், திலகபாமா, கே.பாலு உள்ளிட்டோர் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் இரு தரப்பினரும் பிரச்னையை தேர்தல் ஆணையத்திடம் கொண்டு சென்றுள்ளன. இதனால் விரைவில் தேர்தல் ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தஞ்சாவூர் திருவாரூர் இரு மாவட்ட பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் நிறுவனத் தலைவர் ராமதாஸ், கௌரவ தலைவர் ஜி.கே மணி, சங்கத் தலைவர் அருள் மொழி, பொது செயலாளர் முரளி சங்கர், தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ஸ்டாலின், திருவாரூர் மாவட்ட செயலாளர் வேலு பாஸ்கர் உள்பட பட கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ்,"என் மகன் அன்புமணி இனிமேல் அவரது பெயருக்கு பின்பு ராமதாஸ் என்று என் பெயரை சேர்க்கக்கூடாது. வேண்டுமென்றால் 'ஆர்' என்ற இனிஷியல் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது இன்று நான் திட்டவட்டமாக இந்த மேடையில் அறிவிக்கிறேன்." என்று அவர் கூறினார்.
கும்பகோணத்தைச் சுற்றி நவகிரகங்கள் கோவில் உள்ளன இதை தமிழக அரசு இலவசமாக ஆன்மீக சுற்றுலாவை பொது மக்களுக்கு அளிக்க வேண்டும். கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மத்திய அரசு பருத்தி கொள்முதல் செய்கிறது. இதற்கு கூடுதலாக விலை நிர்ணயிக்க வேண்டும். கும்பகோணத்தைச் சுற்றி கோவில்கள் பள்ளிகள் அதிக உள்ளன. இதன் அருகாமையில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் உள்பட பல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
செய்தி: பாபு ராஜேந்திரன் - கும்பகோணம்.