அண்மையில், பா.ம.க நிறுவன டாக்டர் ராமதாஸ் தனது மகன் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கி செயல் தலைவராக செயல்படுவார் என்றும் இனி தானே பா.ம.க தலைவர் என்று அறிவித்தார். இதனால், பா.ம.க-வில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் வெடித்தது.
டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியானதும், பா.ம.க பொருளாளர் திலக பாமா, கட்சியில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளது என்று அன்புமணிக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இதற்கு எதிர்வினையாற்றிய பா.ம.க பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், “திலக பாமா நன்றியுணர்ச்சி இல்லாமல் பேசுகிறார், அவர் பதவி வில வேண்டும்” என்று வலியுறுத்தி கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய பா.ம.க கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, விரைவில் பிரச்னை சரி செய்யப்படும். நல்ல செய்தி வரும், பா.ம.க-வின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் அன்புமணி கலந்துகொள்வார் என்று கூறினார்.
இந்நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணியுடன் பா.ம.க நிர்வாகிகள் வடிவேல் ராவணன், திலக பாமா திடீர் சந்திப்பு நடத்தியுள்ளனர்.
பா.ம.க-வில் பொதுச் செயலாளர் பதவி பட்டியல் இனத்தவருக்கு என்று கட்சியின் கொள்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. அதன்படி, பா.ம.க-வின் பொதுச் செயலாளராக உள்ள வடிவேல் ராவணன் மற்றும் பா.ம.க பொருளாளர் திலக பாமா இருவரும் பனையூரில் உள்ள அன்புமணியின் இல்லத்திற்கு திடீரென சென்று சந்திப்பு நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு அரை மணி நேரத்திற்கு மேல் நடந்துள்ளது.