புதுச்சேரியில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்ட நிலையில், ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் கூட்டாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 09.08.2025 (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃளுயன்ஸ் அரங்கில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்." என்று அதில் கூறியுள்ளனர்.
இதனிடையே, வருகின்ற 17 ஆம் தேதி அஷ்டமி நாளில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி அருகே உள்ள பட்டனூர் சங்கமித்ராவில் நடக்கிறது என டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். "நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அய்யா உத்தரவுக்கினங்க நம்முடைய பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு வருகின்ற 17.08.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திண்டிவனம் டூ புதுவைக்கு செல்லும் வழியில் பட்டானூர் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறும் என்பதை தெரியப்படுத்துகிறோம்.
இந்த பொதுக்குழுவில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தவறாது கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்." என்று அவர் கூறியுள்ளார்.
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.