பரந்தூரில் விவசாய நிலத்தில் விமான நிலையம் கொண்டு வரக்கூடாது. அதற்கு பதிலாக திருப்போரூர் அருகே உள்ள 5000 ஏக்கர் பரப்பளவிலான உப்பளம் பகுதியில், விமான நிலையம் கொண்டுவரலாம் என்று, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விவசாய மாநாடு நேற்று நடைபெற்றது. செங்கம் சாலையில் உள்ள உழவர் பேரியக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாநிலம் தழுவிய மாநாட்டில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன், உழவர் பேரியக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.
இந்த மாநாட்டில் பேசிய, அன்புமணி ராமதாஸ் கூறுகையில், விவசாயிகளின் பிரச்னையை புரிந்துகொண்ட ஒரே கட்சி பா.ம.க தான். தி.மு.க. அரசு முதலாளிகள் பக்கம் உள்ளது. பா.ம.க.வின் போராட்டத்தால், பல ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. விளை நிலங்களை அழித்து தான் அறிவுசார் நகரம் அமைக்க வேண்டுமா? பரந்தூரில் விமான நிலையம் நிச்சயமாக வரக்கூடாது. விமான நிலையம் திருப்போரூரில் தான் அமைய வேண்டும்.
கொடுங்கோல் ஆட்சியில் கூட விவசாயிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. விவசாய நிலத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் கொடுத்து, அதன் மூலம் மக்களுக்கு அறிவு வளர்க்க உள்ளனராம். தமிழ்நாட்டில் ஒரு சென்ட் நிலம் எடுத்தாலும் அந்த இடத்தில் அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியும் நிற்கும். உழவர் நலனுக்காக திமுக அரசு ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை.
உழவர்களை குண்டர் சட்டத்தில் அடைத்த கொடூர அரசு திமுக அரசு. திமுக முதல்வர் ஸ்டாலின், விலை நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிராக குரல் கொடுத்தார். ஆட்சிக்கு வந்த பிறகு தலைகீழாக மாறிவிட்டார். பரந்தூர் பகுதியில் விவசாய நிலத்தில் விமான நிலையம் கொண்டு வரக்கூடாது. இதற்கு பதிலாக திருப்போரூர் அருகில் உள்ள 5000 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளம் பகுதியில் விமான நிலையத்தை கொண்டு வரலாம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“