பா.ம.க.வில் உள்கட்சி பூசல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தானே தலைவராகச் செயல்பட உள்ளதாகவும் தலைவராக உள்ள அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இதையடுத்து, கட்சிப் பொதுக்குழுவால் விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தானே தலைவராகத் தொடர்வேன் என்று அன்புமணி ராமதாஸ் பதிலறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதனிடையே, கடந்த 2 நாள்களாக ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே கட்சி நிர்வாகிகளும் குடும்பத்தினரும் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற ஜி.கே. மணி செய்தியாளர்களிடம் பேசியபோது உள்கட்சி பூசல் சரியாகிவிட்டதாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசியதாவது: ”மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் மாநாடு மே 11-ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. பாமக தனிக் கொள்கைகள் கொண்ட தனித்துவமான கட்சி. ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ் இருவரும் மாநாட்டில் ஒன்றாக கலந்துகொள்வார்கள். கட்சிக்குள் சலசலப்பு இருந்தது அனைவருக்கும் தெரியும். அந்த பிரச்னைகள் சரியாகிவிட்டன. தற்போது எந்தப் பிரச்னையும் இல்லை. அந்த பிரச்னை மேலும் பெரிதாகாது” என்றார். என்.டி.ஏ. கூட்டணியில் பாமக தொடர்கிறதா? இல்லையா? என்பது குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.
பா.ம.க. தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி, ராமதாஸ் அறிவித்த அன்றைய தினமே எதிர்ப்பு தெரிவித்த பா.ம.க. பொருளாளர் திலகபாமா, தன்னுடைய அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், பா.ம.க.வின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை, அய்யா (ராமதாஸ்) எடுத்த எல்லா முடிவுகளும் சரியே. அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால், இந்த முடிவு தவறு. 'அன்புதானே எல்லாம்' என்று கூறி இருந்தார்.
டாக்டர் ராமதாசை ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று கூறிய பா.ம.க. பொருளாளர் திலகபாமா கட்சியில் இருந்து வெளியேற வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்தநிலையில், "உடன்படா கருத்தையும் உரைக்கின்ற உன் உரிமையை, உயிரை தந்தேனும் காப்பேன்" என வடிவேல் ராவணனின் காட்டமான அறிக்கையைத் தொடர்ந்து திலகபாமா சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். உட்கட்சி விவகாரத்தில் கருத்து தெரிவித்த நிலையில் மீண்டும் திலகபாமா சர்ச்சை கருத்து வெளியாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.