கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
முதலில் பேசிய நயினார் நாகேந்திரன், "பாஜக மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி அவர்களின் மகள் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த நிகழ்விற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதில், ஒருவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் என்பது மிகவும் வருத்தம் மற்றும் வேதனைக்கு உரிய செய்தி.
பெங்களூரு ஐபிஎல் நிகழ்வில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு கர்நாடக அரசின் அலட்சியமே காரணம். பெங்களூரில் இந்த நிகழ்விற்கு சரியான முறையில் ஏற்பாடு செய்யாமல் இருந்ததுதான் உயிரிழப்பிற்குக் காரணம். மகாராட்டிர மாநிலத்தில் கடந்த காலங்களில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டபோது பாஜக அரசு சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தது. பாதுகாப்பாக நடத்தி இருக்க வேண்டிய நிகழ்வை சரியாக கர்நாடகா அரசு செய்யவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை திருப்திகரமாக இல்லை, தமிழக அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது. திமுக ஆட்சி இன்னும் ஒரு வருட காலம் இருக்கிறது. அதுவரை விவசாயிகளுக்கான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
பாமக உட்கட்சிப் பிரச்சனை: பாஜகவுக்குத் தொடர்பில்லை!
அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட பாமக உட்கட்சிப் பிரச்சனை குறித்த கேள்விக்கு, பாட்டாளி மக்கள் கட்சியில் நடப்பது உட்கட்சிப் பிரச்சினை. குருமூர்த்தி, சைதை துரைசாமி ஆகியோர் சென்று இருப்பது தனிப்பட்ட முறையில், பாஜகவிற்கும் அதற்கும் தொடர்பு இல்லை.
மேலும் ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கைதானவர்கள் 19 கொலைகள் செய்து இருப்பதாக வாக்குமூலம் கொடுத்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது, ஏற்கனவே கைதாகி இருப்பவர்கள் நிரபராதிகளா? தவறே செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அமித்ஷா மதுரை வருகை குறித்துப் பேசிய அவர், மதுரையில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அமித்ஷா வருகின்றார். முருக பக்தர் மாநாட்டில் ஒலிக்கும் குரல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எதிரொலிக்கும், என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.