டிடிவி தினகரனுடன் கைகோர்க்கிறதா பாமக? பரபரப்பான புதிய மூவ்

TTV Dhinakaran and PMK: தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்க நாங்கள் விரும்பினாலும், அவர்களிடமிருந்து பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இல்லை.

20 தொகுதிக்கான இடைத்தேர்தல் வேலைகளில் ஆளும் அ.தி.மு.க. ஜரூராக இறங்கிவிட்டது. தேர்தல் பிரச்சாரக் குழு பொறுப்பாளராக, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனை நியமித்துள்ளனர். அ.ம.மு.க.விற்குள் மேல்முறையீடு பஞ்சாயத்து ஒருபக்கம் உருண்டோடினாலும், இடைத்தேர்தலை சந்திக்கத் தயார் என டி.டி.வி. தினகரனும் அறிவித்துவிட்டார். எந்நேரத்தில் தேர்தல் வந்தாலும், அதை சந்திப்பதற்கு தி.மு.க.வும் கூட்டணி கட்சிகளோடு ரெடி!

இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் 20 தொகுதிகளில், 7 தொகுதிகள் வடமாவட்டங்களில் வருகிறது. வட தமிழகத்தை தங்களில் கோட்டையாக உருவகப்படுத்தும் பா.ம.க.வின் நிலை என்ன? அக்கட்சியின் சீனியர் தலைகளோடு பேசினோம்.

“கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில்,  மொத்தம் 230 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., 68 தொகுதிகளில் மூன்றாமிடம் பெற்றது. ஒவ்வொரு தொகுதியிலும் பத்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் வரை தனக்கென வாக்கு வங்கி இருப்பதை இத்தேர்தலில் பா.ம.க. உறுதிப்படுத்தியது.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பழனியப்பனை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் சத்தியமூர்த்தி 29.7 சதவிகித வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பெற்றார். சோளிங்கர் தொகுதியில் என்.ஜி.பார்த்திபனை எதிர்த்து போட்டியிட்ட சரவணன், 50,827 வாக்குகளை பெற்று மூன்றாமிடம் பெற்றார். திருப்போரூர் தொகுதியில் 28,125 வாக்குகள், பூந்தமல்லியில் 15,827 வாக்குகள் என இடைத்தேர்தலை சந்திக்கவிருக்கும் தொகுதிகளில் எல்லாம் தனித்தே போட்டியிட்டு பா.ம.க. இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றது.

எடப்பாடி, ஜெயங்கொண்டம், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் ஆகிய தொகுதிகளில் தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாமிடம் பெற்றது. பென்னாகரம் தொகுதியில் இன்பசேகரனிடம் 18,446 வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணி ராமதாஸ் வெற்றியை பறிகொடுத்தார். மூன்றாமிடம் பெற்ற அ.தி.மு.க.விற்கு 51,687 வாக்குகள் கிடைத்தன. இந்த கூட்டல், கழித்தலை மையமாக வைத்து தான் வரப்போகும் கூட்டணிக்கு ராமதாஸ் அச்சாரமிட்டு வருகிறார்.

தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்க நாங்கள் விரும்பினாலும், அவர்களிடமிருந்து பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இல்லை. விடுதலைச் சிறுத்தைகளை வைத்துக் கொண்டு எங்களை உள்ளே இழுக்க தி.மு.க. விரும்பவில்லை. மற்ற சமூகத்தினரின் வாக்குகள் போய்விடும் என ஸ்டாலின் கருதுகிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், உள் ஒதுக்கீடாக நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சில தி.மு.க. தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனை ராமதாஸ் ஏற்கவில்லை.

அடுத்ததாக, ஒரு உறைக்குள் ஒரு கத்தி என்பது போல, கடந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய அன்புமணி ராமதாஸ், மு.க.ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக ஏற்பாரா என்பது ஐயக் குறி?” என்றவர்களிடம், ”வேறு என்ன ரூட் எடுக்கப் போகிறீர்கள்?” என்றோம்.

“தற்போது வரவிருக்கும் 20 தொகுதி இடைத்தேர்தல் மட்டுமல்லாது, பாராளுமன்றத் தேர்தலுக்கும் சேர்த்து டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வோடு அணி சேர ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். வட மாவட்டங்களில் அவர்களுக்கு இருப்பு இல்லை, எங்களுக்கு தென் மாவட்டங்களில் பலமில்லை. இக்கூட்டணி அமைந்தால், அது இருவருக்குமான லாபமாக அமையும். தொகுதி பங்கீட்டிலும் பிரச்சனை இருக்காது. தினகரனுடன் கைகோர்க்கும் பட்சத்தில், முதல்வர் யார் என்பதை தேர்தல் முடிந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்துவிட்டோம்.” என்றனர்.

டி.டி.வி. ரூட் எடுத்திருக்கும் ராமதாஸ், மாம்பழத்தை பழுக்க வைப்பாரா? என்பது போகப் போகத் தெரிந்துவிடும்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close