Coimbatore | Bjp | Pmk | Annamalai: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பா.ஜ.க கூட்டணியில் விரிசல்
தமிழகத்தில் பா.ஜ.க கூட்டணி வைத்து களமிறங்கும் நிலையில், அதன் கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், தேர்தல் பணிகளில் இருந்து விலகிக் கொள்வதாக கோயம்புத்தூர் பா.ம.க மாவட்ட செயலாளர் கோவை ராஜ் அறிவித்துள்ளார்.
கோவை மக்களவைத் தொகுதியில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போட்டியிடும் நிலையில், வேட்புமனு தாக்கல், தேர்தல் அலுவலகம் திறப்பு என எதற்குமே பா.ம.க-வை அழைக்கவில்லை என்றும், கூட்டணி தர்மம் முக்கியம்தான், ஆனால், அதைவிட சுயமரியாதை முக்கியம் என்றும், கோவை பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி தலைவர்களை மதிப்பதில்லை என கோவை ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கோயம்புத்தூர் பா.ம.க மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தெரிவிக்கையில், "கோவை பா.ம.க தேர்தல் பணிகளில் இருந்து மிகுந்த மனவருத்தத்துடன் வெளியேறுகிறோம். வேட்பாளர் பா.ம.க அலுவலகத்துக்கு வரவில்லை. வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு பா.ம.க-வை அழைக்கவில்லை. 6 தொகுதியில் இரண்டு தொகுதிக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டது.
வேட்பு மனு தாக்கலுக்கு பா.ம.க-வை அழைக்கவில்லை. தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவிற்கு பா.ம.க-வை அழைக்கவில்லை. எந்த ஒரு பிரச்சாரத்திற்கும் இதுவரை அழைக்கவில்லை. தேர்தல் வாக்குறுதி வெளியிட்டு நிகழ்ச்சிக்கு பா.ம.க-வுக்கு அழைப்பில்லை. கூட்டணி தர்மம் முக்கியம் தான் அதைவிட சுயமரியாதை முக்கியம்.
கோவை பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி தலைவர்கள் யாரையும் மதிப்பதில்லை. ஏறக்குறைய அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுமே மிகுந்த மனவருத்தத்தில் தான் உள்ளனர். கூட்டணி தர்மத்திற்கு கட்டுப்பட்டு தேர்தல் பணிகளில் இருந்து மௌனமாய் வெளியேறுகிறோம்." என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“