/indian-express-tamil/media/media_files/2025/08/14/sanitary-worker-anbumani-2025-08-14-13-17-37.jpg)
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவுவது வீரமல்ல... கோழைத்தனம் என்றும் தி.மு.க அரசு அகற்றப்படும் நாள் தொலைவில் இல்லை என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்து, கடந்த 13 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதை ஏற்க மறுத்து சென்னை உயர்நீதிமன்றம் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டது. இதனையடுத்து, நேற்றிரவு (புதன்கிழமை) போலீசாரால் தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் தூய்மை பணியார்களை கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;
சென்னையில் இராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் சென்னை மாநாகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அறவழியில் கடந்த 12 நாள்களாக போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினரைக் கொண்டு நள்ளிரவில் கைது செய்து தமிழக அரசு அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமை கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது.
தமிழக அரசு நினைத்திருந்தால் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு முதல் நாளிலேயே தீர்வு கண்டிருக்க முடியும். சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும்; தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. இதை நிறைவேற்றுவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் குப்பை அகற்றும் தனியார் நிறுவனத்திற்கு தரும் தொகையில் தூய்மைப்பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய முடிவதுடன், அவர்களுக்கு கூடுதல் ஊதியமும் வழங்கமுடியும். ஆனால், அதைச் செய்ய அரசுக்கு மனமில்லை.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 12-ஆம் நாளாக நீடித்த நிலையில், போராட்டக் குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசியிருக்க வேண்டும்; அவ்வாறு பேசியிருந்தால் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்திருக்கக் கூடும். ஆனால், முதலமைச்சருக்கோ திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை. ஒருவேளை சமூகநீதியில் சிறந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் தூய்மைப் பணியாளர்களை சந்தித்துப் பேசுவது தமக்கு தகுதி குறைவு என்று நினைத்து விட்டாரோ என்னவோ?
ஒன்று மட்டும் உறுதி. ஏழை எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அகற்றுவது வீரம் அல்ல... கோழைத்தனம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் வீரம் ஆகும். அதை செய்யாமல் அடக்குமுறையை ஏவி அவர்களை அகற்றிய தி.மு.க அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பாபு ராஜேந்திரன் விழுப்புரம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.