காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்க கோரி, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கியுள்ளார். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் அன்புமணியின் முதற்கட்ட விழிப்புணர்வு பயணம் நடைபெறுகிறது.
பரங்கிப்பேட்டையிலிருந்து தனது விழிப்புணர்வு பயணத்தை தொடங்கிய அன்புமணி, புவனகிரி, சேத்தியாத்தோப்பு வழியாக காட்டுமன்னார்கோவில் வந்தடைந்தார். புவனகிரியில் கூடியிருந்த கூட்டத்தினரிடம் அவர் பேசுகையில், "பெட்ரோல் கெமிக்கல் மண்டலம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என இரண்டு திட்டங்களால், உங்களை இந்த மண்ணில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையை மத்திய மாநில அரசுகள் தொடங்கியிருக்கின்றன. நாடு முழுவதும் ஹைட்ரோ கார்பன் எடுக்க 54 உரிமங்களை கடந்த மாதம் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கொடுத்திருக்கிறது. இதில் மூன்று உரிமங்கள் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு அளிக்கப்பட்டதில் இரண்டு உரிமங்கள் ஸ்டெர்லைட்டின் வேதாந்தா நிறுவனத்திற்கு கொடுத்திருக்கின்றனர். கடல் வழியில் மரக்காணத்திலிருந்து பிச்சாவரம் வரையிலும், பிச்சாவரத்திலிருந்து வேதாரண்யம் வரை என இரண்டு உரிமங்கள் அந்நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு சுமார் 85 கிராமங்களில், அதாவது கடலூர், குறிஞ்சிப்பாடி, குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரபாளையம் ஆகிய ஒன்றியங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் கொடுத்துள்ளனர்.
காவிரி டெல்டாவில் கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டம் இன்றும் செயல்படுத்தப்படுகிறது. 700 கிணறுகள் போடப்பட்டதில், 219 கிணறுகள் இன்றும் உள்ளன. அதில் கச்சா எண்ணெய் மட்டுமே எடுத்து வந்தனர். ஆனால், ஹைட்ரோ கார்பனில், மீத்தேன், பெட்ரோல், டீசல், மண்ணென்ணை, ஷேல் கேஸ், நிலக்கரி எல்லாமே அடங்கியிருக்கிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் மிகப்பெரிய சூழ்ச்சி இருக்கிறது.
ஷேல் கேஸ் எடுப்பதற்கு 30 அடி அகலத்தில், 2000 அடி ஆழத்தில் கிணறு தோண்டுவார்கள். அதில் ரசாயன நீரைப் பாய்ச்சி, பூமிக்கடியில் இருக்கின்ற எரிவாயுவை வெளியே எடுப்பார்கள். பாய்ச்சிய ரசாயன நீரை கிணற்றில் இருந்து எடுத்து வெளியே விடுவார்கள். மற்ற நாடுகளில் மனிதர்கள் வாழாத பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கனடாவில் 1000 கி.மீ.க்கு மனித சஞ்சாரமே இல்லாத பகுதியில் இன்று இத்திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். ஆனால் இங்கு, ஆயிரமாயிரம் வருடங்களாக சோறு போட்ட நமது நஞ்சை பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர துடிக்கிறார்கள். விவசாயிகள் பற்றி மோடிக்கு கவலையில்லை, அவரது கவலை எல்லாமே அதானி, அம்பானி மீது மட்டும் தான் உள்ளது.
ஷேல் கேஸ் கிணற்றிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன நீரால், நமது நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், புற்றுநோய், கருச்சிதைவு, முளைப்பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி என மிகப்பெரிய விளைவுகள் வரும். இதை நான் சும்மா சொல்லல, ஒரு டாக்டராக தான் சொல்கிறேன். இத்திட்டத்தை ஒருபோதும் நாம் அனுமதிக்க கூடாது. ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக யாராவது உள்ள வந்து போர் போட்டால், இந்த அன்புமணி ராமதாஸ் வந்து பிடுங்கி போட்டுட்டு போய்டுவான். அன்புமணி ராமதாஸோட ஒருபக்கம் தான் பார்த்திருக்கீங்க... மக்களுக்கு ஏதாவது பிரச்சனைனா வேற முகத்தை பார்க்க வேண்டியதிருக்கும்!" என சீற, கூட்டத்தில் விசில் பறந்தது.