![Anbumani Ramadoss TN GOVT Aavin Green Magic Plus scam Tamil News](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2024/10/16/t88l8LlVYY9xx9zIsiHr.jpg)
அரசுத்துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீட்டுக்கு சிறப்பு ஆள்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தாமல் சமூக அநீதி இழைப்பதா? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் அளவு 4% ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களில் தகுதியான மாற்றுத்திறனாளிகளை அமர்த்த சிறப்பு ஆள்தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று வரை அத்தகைய சிறப்பு ஆள்தேர்வு நடத்தப்படவில்லை. சட்டப்பேரவையிலும், சட்டப்பேரவைக்கு வெளியிலும் அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு விட்டு, அவற்றை செயல்படுத்த எந்த நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்றத்தில் 2016-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படி, தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டை மூன்றிலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தி கடந்த 2017-ஆம் ஆண்டு மே 30-ஆம் நாள் அரசாணை வெளியிடப்பட்டது. அதே நாளில் அந்த அரசாணைக்கு வரவேற்பு தெரிவித்த நான், ’’தமிழக அரசுத் துறைகளில் குறைந்த எண்ணிக்கையிலான பணிகளே மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றை மறுஆய்வு செய்து கூடுதல் பணிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடந்த காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டு, அவர்கள் இல்லாததால் காலியாக வைக்கப்பட்டுள்ள பணியிடங்களையும் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தேன்.
இந்தக் கோரிக்கையை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு துறையிலும் உள்ள பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அடுத்த ஓராண்டிற்குள் சிறப்பு ஆள்தேர்வின் மூலம் அவை நிரப்பப்படும் என்று அறிவித்திருந்தார். அதனடிப்படையில் 27.04.2023-ஆம் நாள் அரசாணை வெளியிடப்பட்டது மட்டுமின்றி, அரசுத்துறைகளில் இரு ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு விதிகளைத் தளர்த்தி முன்னுரிமை அடிப்படையில் நிலையான பணி வழங்கப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், அரசாணை வெளியிடப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பும், அரசாணையும் கோப்புகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணி வழங்க எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. தமிழக அரசு நினைத்தால் மிக எளிதாக சிறப்பு ஆள்தேர்வுகளை நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைகளை வழங்கியிருக்கலாம். ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாங்குவதில் திராவிட மாடல் அரசு எந்த அக்கறையையும் காட்டவில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டதன் நோக்கமும், இந்த இட ஒதுக்கீட்டை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதன் நோக்கமும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்பது தான். ஆனால், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக வானத்தையே வில்லாக வளைத்து விட்டதைப் போன்று பெருமை பேசிக் கொள்ளும் திராவிட மாடல் அரசு, அவர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான அடிப்படைக் கடமையைக் கூட செய்யத் தவறியதிலிருந்தே அதன் இரட்டைவேடத்தை அறிந்து கொள்ள முடியும்.
பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாள் நாளை மறுநாள் கொண்டாப்படும் நிலையில், அதை தமிழக அரசின் சாதனை என்று வீண் பெருமை பேசுவதற்கான வாய்ப்பாக நினைத்து வீணடிக்காமல், மாற்றுத்திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவதற்கான சிறப்பு ஆள்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நடப்பு நிதியாண்டின் முடிவுக்குள் அனைத்துப் பின்னடைவுப் பணியிடங்களையும் நிரப்பி மாற்றுத்திறனாளிகளுக்கு சமூகநீதி வழங்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.