பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைப்பதையும், அதன் வாயிலாக கட்டணங்களை உயர்த்துவதையும் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
"தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் இதுவரை மூன்று கட்டங்களில் ஆண்டுக்கு ரூ.40,000 கோடி அளவுக்கு மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக வீடுகளுக்கான சொத்து வரி, குடிநீர் வரி, நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு உயர்வு என அனைத்து வழிகளிலும் ஏழை, எளிய மக்களை தமிழக அரசு வாட்டி வதைத்து வருகிறது. இப்போது கூடுதலாக பேருந்து கட்டணங்களையும் உயர்த்தும் நோக்குடன் அதற்காக தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏழை, எளிய மக்கள் மீது தமிழக அரசுக்கு சிறிதும் இரக்கமே இல்லை என்பதைத் தான் இந்த நடவடிக்கை காட்டுகிறது.
அரசுப் பேருந்துகளில் பயணிக்கவே மக்கள் அஞ்சும் நிலை தான் உள்ளது. கூரை பிய்த்துக் கொண்டு பறக்கும் பேருந்துகள், பின்புறத் தடுப்பு இல்லாத பேருந்துகள், சக்கரம் கழன்று ஓடும் பேருந்துகள், இருக்கை முறிந்து நடத்துநரையே வெளியில் தூக்கி வீசும் பேருந்துகள், இருக்கையிலிருந்து நேராக சாலையில் விழும் அளவுக்கு ஓட்டை நிறைந்த பேருந்துகள் என அவலங்களின் உச்சமாக அரசுப் பேருந்துகள் திகழ்கின்றன.
இந்த அலங்கோலங்களை சரி செய்யாமல், போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்களையும், முறைகேடுகளையும் களையாமல் பேருந்து கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே, பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைப்பதையும், அதன் வாயிலாக கட்டணங்களை உயர்த்துவதையும் தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, முறைகேடுகளை களைந்து, பாதுகாப்பான பேருந்துகளை இயக்குவதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களை இலாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்."
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) August 13, 2024
பரிந்துரைக்க தனி ஆணையம்: ஏழை, நடுத்தர மக்கள் மீது அரசுக்கு இரக்கமே இல்லையா?
தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.