தமிழக மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்கில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தனது "தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை" இன்று தொடங்கினார். திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு, இந்தப் பயணத்தை அன்புமணி ராமதாஸ் ஆரம்பித்தார். இன்று தொடங்கிய இந்த நடைப்பயணம், நவம்பர் 1-ம் தேதி வரை தொடரும். மொத்தம் 100 நாட்கள் நடைபெறும் இந்தப் பயணம், தருமபுரியில் நிறைவடையும்.
10 முக்கிய உரிமைகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அன்புமணி ராமதாஸ் இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். திருப்போரூரில் நடைப்பயணத்தைத் தொடங்கிய அவர், பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். அடுத்ததாக, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அன்புமணி, திருப்போரூர் ரவுண்டானா பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/25/anbumani-2-2025-07-25-21-54-05.jpg)
முதல்கட்டமாக இன்று திருப்போரூரில் தொடங்கி, ஜூலை 26 - செங்கல்பட்டு, உத்தரமேரூர், ஜூலை 27-இல் காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர், ஜூலை 28 -இல் அம்பத்தூர், மதுரவாயல், ஜூலை 31-இல் கும்மிடிப்பூண்டி, ஆக.1 -இல் திருவள்ளூர், திருத்தணி, ஆக.2-இல் சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆக.3 -இல் ஆற்காடு, வேலூர், ஆக. 4 -இல் வாணியம்பாடி, திருப்பத்தூர் வரை அவர் நடைப்பயணம் செய்கிறார். அடுத்தகட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைப்பயணத்தின் முக்கிய நோக்கங்களாக, சமூகநீதிக்கான உரிமை, வன்முறையில்லா வாழ்வுக்கான பெண்கள் உரிமை, வேலைக்கான உரிமை, விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, கல்வி மற்றும் நல்வாழ்வுக்கான உரிமை உள்ளிட்ட 10 உரிமைகளை மீட்க வேண்டும் என்பவை குறிப்பிடப்பட்டுள்ளன.