Advertisment

பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தைக் கைவிடாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் - அன்புமணி எச்சரிக்கை

சென்னையில் கிடைக்கும் குப்பைகளைக் கொண்டு குப்பை எரிஉலை அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை; பெருங்குடியில் குப்பை எரி உலை அமைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பா.ம.க. நடத்தும் – அன்புமணி ராமதாஸ்

author-image
WebDesk
New Update
Anbumani Ramadoss vanniyar quota TN CM MK Stalin DMK Govt Tamil News

அன்புமணி ராமதாஸ் (கோப்பு படம்)

குப்பையை எரித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்றது. எனவே பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது, 

சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரிஉலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி இருக்கிறது. அருகில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கும், அப்பகுதியில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கும் பெரும் தீங்கை ஏற்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த தி.மு.க அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.

பெருங்குடியில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மிக அருகில் 150 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரி உலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், இராம்சர் தலம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியல் மிகக் கடுமையாக பாதிக்கப்படும். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்யும் அளவுக்கு அதிகமான மழை நீரை உறிஞ்சி வெள்ளம் ஏற்படாமல் தடுக்கும் பணியை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தான் செய்கிறது. யுரேஷியா கழுகு ஆந்தை, கோனமூக்கு உள்ளான், தட்டைவாயன் வாத்து, நாமத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, கரண்டி வாயன், நீலத்தாழைக் கோழி, நைட் ஹெரான், நீர்க்காகம், நாமக்கோழி, மஞ்சள் குருகு, நெடுங்கால் உள்ளான் உள்ளிட்ட 115 வகையான பறவைகள், 10 வகையான பாலூட்டிகள், 9 ஊர்வன வகைகள், 46 வகை மீன்கள், 5 வகையான ஒட்டு மீன்கள், 9 வகையான மெல்லுடலிகள் போன்றவற்றின் வாழிடமாக பள்ளிக்கரணை சதுப்பு நிலம் திகழ்கிறது. அதை ஒட்டிய பகுதிகளில் குப்பை எரி உலை அமைக்கப்பட்டால் அது பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு மட்டுமின்றி, அங்கு வாழும் அரிய உயிரினங்களுக்கும் எல்லையில்லாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.

Advertisment
Advertisement

பள்ளிக்கரணைக்கு அப்பால் வேளச்சேரி, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மேடவாக்கம், பெருங்குடி, தரமணி உள்ளிட்ட பகுதிகளும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளும். எரி உலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து குப்பைகளும் ஒன்றாக எரிக்கப்படும். டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு, டையாக்சைடு மற்றும் ஃபியூரன் உள்ளிட்டவை வெளியாகும். காற்றில் மிதக்கும் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் ஆகியவையும் வெளியாகும். இவற்றில் பல ரசாயனங்கள் சுற்றுச்சூழலில் அழியாமல் நிலைத்திருக்கக் கூடியவை, நச்சுத்தன்மை வாய்ந்தவை, உயிரினங்களுக்குள் நிலைத்திருக்கக் கூடியவை.

இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காற்று மாசுபாடு மட்டுமல்லாமல், எரி உலை சாம்பலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது ஆகும்.

பெருங்குடி எரி உலையை இப்போது அல்ல, கடந்த 7 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று பல முறை அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். பெருங்குடி, கொடுங்கையூர் ஆகிய இடங்களில் குப்பை எரி உலை அமைக்கும் திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்ட போது, அதில் பாட்டாளி மக்கள் கட்சி பங்கேற்று கடுமையாக எதிர்த்தது. தமிழ்நாட்டில் ஆட்சிகள் மாறினாலும், மக்களுக்கு தீங்கு பயக்கும் இத்தகைய திட்டங்களை மட்டும் கைவிடாமல் தொடர்ந்து செயல்படுத்துவது மிகவும் வருத்தமளிக்கிறது. மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையே இத்தகைய திட்டங்கள் மீண்டும், மீண்டும் நிரூபிக்கின்றன.

மேலை நாடுகளின் மக்கள் குப்பை எரி உலைகளை கடுமையாக எதிர்க்கின்றனர். அமெரிக்க நாட்டில் 1991 ஆம் ஆண்டில் 187 எரி உலைகள் இருந்தன. ஆனால், இப்போது வெறும் 77 எரி உலைகள் மட்டுமே உள்ளன. கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் 250 நகரங்களின் மேயர்கள் ஒன்று கூடி, தங்களது நகரங்களில் எரி உலை திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்தியாவில் உருவாகும் குப்பை, எரி உலைகளுக்கு ஏற்றதாக இல்லாததால் லக்னோ, புனே, கான்பூர் உள்ளிட்ட பல இடங்களில் தொடங்கப்பட்ட எரி உலைகள் தோல்வியடைந்தன. அவை மூடப்பட்டுவிட்டன.

சென்னை மாநகரிலும் குப்பையை எரித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமற்றது ஆகும். சென்னையில் கிடைக்கும் குப்பைகளைக் கொண்டு குப்பை எரிஉலை அமைப்பது நடைமுறையில் சாத்தியமில்லை. குப்பையை வகை பிரிப்பது, மக்கும் கழிவுகளை மக்க வைப்பது, கழிவுகளை மறு சுழற்சிக்கு அனுப்புவது ஆகியவை தான் தீர்வு ஆகும். இதை உணர்ந்து பெருங்குடியில் குப்பை எரி உலை அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி கைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.

Chennai Anbumani Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment