Advertisment

தி.மு.க.,வினர் மீது வழக்கு மட்டும், பா.ம.க.,வினர் கைது; இது தான் காவல்துறை நீதியா? அன்புமணி கேள்வி

காவல்துறை நடுநிலையாக செயல்படுகிறது என்றால், அனுமதியில்லாமல் நடத்தப்பட்ட தி.மு.க போராட்டத்தை அனுமதித்தது ஏன்? போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாதது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

author-image
WebDesk
New Update
stalin anbumani

நல்லா இருக்கே இந்த நாடகம்; தி.மு.க.,வினரை போராட அனுமதித்து விட்டு வழக்கு மட்டும் பதிவதும், பா.ம.க.,வினரை போராட விடாமல் சிறை வைப்பதும் தான் காவல்துறை நீதியா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது; 

தமிழ்நாட்டில் அனுமதியின்றி போராட்டம் நடத்துவோர் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும், அவ்வாறு போராடிய தி.மு.க.,வினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். காவல்துறையின் பாரபட்சமும், தி.மு.க.,வினரின் அத்துமீறல்களும் பூசணிக்காய் அளவுக்கு இல்லாமல், இமயமலை அளவுக்கு பரந்து விரிந்து கிடக்கும் நிலையில், அதை நடுநிலை விளக்கம் என்ற ஒரு பிடி சோற்றைக் கொண்டு மறைக்க முயன்றிருக்கிறார் முதலமைச்சர்.  அரசியல் அடிப்படைத் தெரிந்த எவரும் இந்த விளக்கத்தை ஏற்க மாட்டார்கள். இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுத்த முதலமைச்சரை நினைத்தால் பரிதாபமாகத் தான் இருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி தி.மு.க.,வின் ஆதரவு பெற்றவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீதான விவாதத்தில் பேசிய பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி, பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு பா.ம.க சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த போராட்டத்திற்கு எதிராக காவல்துறை சார்பில் கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளை சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விளக்கத்தை அளித்திருக்கிறார்.

Advertisment
Advertisement

போராட்டம் நடத்தியதற்காக பா.ம.க.,வினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைப் போலவே தி.மு.க.,வினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதற்காகவே தி.மு.க அரசுக்கும், சென்னை மாநகர காவல்துறைக்கும் நடுநிலை நாயகர்கள் விருதை வழங்கி விட முடியாது; வேண்டுமானால் நடுநிலை நாடகர்கள் என்ற விருதை வேண்டுமானால் வழங்கலாம். அந்த அளவுக்கு இந்த விவகாரத்தில் அரசும், காவல்துறையின் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்துவதற்காக 4 நாட்களுக்கு முன் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், போராட்ட நாளுக்கு முதல் நாளில் தான் திடீரென அனுமதி மறுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி போராட்டம் நடைபெறவிருந்த வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட காவலர்களை நிறுத்தி எவரும் அங்கு கூடாத வகையில் நெருக்கடி கொடுத்தது. அதையும் மீறி அங்கு கூடியவர்களை தீவிரவாதிகளை கைது செய்வதைப் போல கைது செய்தது. போராட்டத்திற்கு தலைமையேற்க வந்த பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணியை ஒரு குற்றவாளியைப் போல கைது செய்து அவரது முதுகில் கை வைத்து காவல் ஆய்வாளர் ஒருவர் இழுத்துச் சென்றார். பா.ம.க.,வினர் அனைவரும் சுமார் 10 மணி நேரம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்களில் சிறை வைக்கப்பட்டனர்.

ஆனால், தி.மு.க.,வினர் அறிவிப்பு வெளியிட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக போராட்டம் நடத்தினர். அவர்களின் போராட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று காவல்துறை கூறுகிறது. ஆனால், பா.ம.க.,வின் போராட்டத்தை தடுத்து நிறுத்தியதைப் போல தி.மு.க.,வின் போராட்டத்தைத் தடுக்க எந்த முயற்சியையும் காவல்துறை மேற்கொள்ளவில்லை. மாறாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தி.மு.க நடத்திய போராட்டத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் காவல்துறையினர் காவல் காத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க நிர்வாகிகள் அனைவரையும் பாதுகாப்பாக அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.

காவல்துறையினரின் செயல்களை கண்டிக்கும் வகையில் நேற்று நான் அறிக்கை வெளியிட்ட பிறகு தான் தி.மு.க.,வினர் மீது வழக்குத் தொடரப்பட்டதாக ஒரு நாடகத்தை காவல்துறை அரங்கேற்றியது. காவல்துறை நடுநிலையாக செயல்படுகிறது என்றால், அனுமதியில்லாமல் நடத்தப்பட்ட தி.மு.க போராட்டத்தை அனுமதித்தது ஏன்? போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாதது ஏன்? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு காவல்துறையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தி.மு.க அரசும், காவல்துறையும் நடத்தும் நாடகங்களை மக்கள் நம்ப மாட்டார்கள். தி.மு.க அரசுக்கு அவர்க்ள் பாடம் கற்பிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Anbumani Ramadoss Police Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment