Advertisment

வீரபாண்டியார் இருந்திருந்தால்… வன்னியர் இட ஒதுக்கீட்டை கேட்க தி.மு.க.,வில் இப்ப யாரும் இல்லை; அன்புமணி ராமதாஸ்

வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின். வீரபாண்டியார் இருந்திருந்தால், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை, தகராறு செய்து பெற்று தந்திருப்பார். இப்போது, தி.மு.க-வில் இதுபற்றி கேட்கக் கூட யாரும் இல்லை – அன்புமணி ராமதாஸ்

author-image
WebDesk
New Update
Anbumani salem vanniyar

”வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின். நாங்கள் மணிமண்டபம் கேட்கவில்லை, இடஒதுக்கீடு தான் கேட்கிறோம்” என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

சேலத்தில் மாவட்ட பா.ம.க சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. மாநகர மாவட்டச் செயலாளர் அருள் எம்.எல்.ஏ, தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கதிர்.ராசரத்தினம் முன்னிலை வகித்தார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்பட பா.ம.க-வினர் திரளாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: “பா.ம.க கடந்த 1996-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது. அன்று தொடங்கி இன்று வரை நாம் வளர்ந்து இருக்கிறோமா என்பதைப் பார்க்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட சமுதாயம் முன்னுக்கு வர வேண்டுமென பா.ம.க எத்தனையோ போராட்டங்களை நடத்தி உள்ளது. இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடு சட்டங்களையும், தமிழகத்தில் 4 இட ஒதுக்கீடு சட்டங்களையும் கொண்டு வந்த ஒரே தலைவர் ராமதாஸ். வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க எம்.ஜி.ஆர், சட்டம் கொண்டு வர இருந்தார். உடல் நலக்குறைவால் அவர் மறைந்தார். ஜெயலலிதா, நன்மையும் செய்யவில்லை. தீமையும் செய்யவில்லை.

Advertisment
Advertisement

கருணாநிதி, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். எடப்பாடி பழனிசாமி 10.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்தார். ஆனால், அந்த சட்டம் சரிவர நிறைவேற்றப்படவில்லை என்பதால், நீதிமன்றத்துக்கு சென்றபோது, அது ரத்து செய்யப்பட தமிழக முதல்வர் ஸ்டாலின் காரணமாக இருந்தார். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்து, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் அதனை செய்யவில்லை. வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின். வீரபாண்டியார் இருந்திருந்தால், வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை, தகராறு செய்து பெற்று தந்திருப்பார். இப்போது, தி.மு.க-வில் இதுபற்றி கேட்கக் கூட யாரும் இல்லை. 

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி என ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில், கல்வி, வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், வன்னியர்கள் நக்சல்களாக மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ராமதாஸின் போராட்டத்தில் இணைந்து, நக்சல் பாதையைக் கைவிட்டனர். அதனால், தமிழகம் நக்சல்கள் இல்லாத மாநிலமானது. இதேபோல், கலவரம் இன்றி வட மாவட்டங்கள் அமைதியாக இருப்பதற்கு, ராமதாஸ் தான் காரணம். 

மேட்டூர் அணை உபரி நீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க தான் முதலில் வலியுறுத்தியது. போராட்டங்களை நடத்தியது. மேட்டூர் உபரி நீரை திருமணிமுத்தாறு, சரபங்கா நதி, வசிஷ்ட நதி ஆகியவற்றுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தான் பா.ம.க-வின் திட்டம். சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைய வேண்டும் என்ற கோரிக்கை காமராஜர் காலத்திலேயே இருந்தது. அதனை பா.ம.க தான் கொண்டு வந்தது.

தமிழக முதல்வர், விழுப்புரத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளின் மணிமண்டபத்தை இன்று திறந்து வைத்துள்ளார். அந்த தியாகிகளின் குடும்பத்தை, வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து சந்தித்துப் பேசி, கருணாநிதி, தி.மு.க ஆகியோரைப் புகழ்ந்து பேச வைத்து, வீடியோ எடுத்துள்ளனர். நாங்கள் மணிமண்டபம் கேட்கவில்லை, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடுதான் கேட்கிறோம். தமிழகத்தில் இனி கூட்டணி ஆட்சி மட்டுமே அமையும். அதற்கான சூழல் வந்துவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. பா.ம.க-வினர் அர்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும்,” என அன்புமணி ராமதாஸ் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, “அனைத்து சமய, சமுதாய மக்களும் ஒற்றுமையாக, அமைதியாக வாழ வேண்டும். அவரவருக்கு உரிய இட ஒதுக்கீடு பெற வேண்டும் என்பது தான் பா.ம.க-வின் நோக்கம். மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு, என்னுடைய நண்பர் வீரபாண்டியார் முக்கிய பங்கு வகித்தார்.

தமிழகம், மது, கஞ்சாவில் சீரழிந்து கிடக்கிறது. 3 மாதம் நாங்கள் சொல்வதை தமிழக அரசு கேட்டால், தமிழகத்தில் எந்த போதைப்பொருளும் இருக்காது. டாஸ்மாக் மதுக்கடைகளை மூடிவிட்டால், அரசுக்கு வருமானம் இருக்காது என்று கூறுகிறார்கள். ஆனால், மது விற்பனை இல்லாமல், அரசுக்கு எப்படி வருவாயை ஈட்ட முடியும் என்பது குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்னரே, நாங்கள் புத்தகம் வெளியிட்டுவிட்டோம்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளும் என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், தமிழகத்தில் ஒரு சொட்டு மழைநீர் கூட, கடலில் வீணாகச் சென்று கலக்கக் கூடாது என்று ஒரு வரமும், தமிழகத்தில் ஒரு சொட்டு மதுவும் இருக்கக் கூடாது என மற்றொரு வரமும் கேட்பேன். மேலும், கொசுறு வரமாக, தமிழகத்தில் கஞ்சா இருக்கக் கூடாது என்றும் வரம் கேட்பேன். அனைத்து சமுதாய மக்களுக்கும் இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்தோம். தமிழகத்தில், அனைத்து சமுதாய மக்களையும் ஒரு தாய் மக்களாக, நினைத்து, அவர்களுக்காக நாங்கள் பாடுபடுவோம்,” என ராமதாஸ் பேசினார்.

க.சண்முகவடிவேல்

Anbumani Ramadoss Pmk Salem
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment