மற்ற மாநிலங்களில் தமிழ் கற்றுக் கொள்கிறார்களா? கோவையில் அன்புமணி ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கவில்லை, என்றால் நிதியை வழங்க மாட்டோம் என மத்திய அமைச்சர் கூறுவது மிக மிக தவறானது; கோவை அன்புமணி ராமதாஸ் பேட்டி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
anbumani kovai tamil

இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரம் ஏன் தமிழ்நாட்டிற்கு இருக்காது. அதிகாரத்தில் இருந்து கொண்டு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள் கோழைகள் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisment

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது; 

கடந்த ஆண்டு அதற்கு முந்தைய ஆண்டை விட, தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில், 52 விழுக்காடு உயர்ந்து இருக்கிறது. இது மிகவும் வெட்கக்கேடானது, முதலமைச்சர் மற்றும் ஆட்சியர்களுக்கு அவமானமானது. தமிழ்நாட்டில் பெண் குழந்தைகள் மீதான குற்றமும் உயர்ந்து இருக்கிறது. இதில் இருந்து அமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியவும் இல்லை, புரியவும் இல்லை. வெறும் அன்றாடம் விளம்பரம் மட்டும் தான். காலையில் 2 மணி நேரம் கால்ஷீட் நடக்கிறது, தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்ற நிலை கூட தெரியாமல் இருக்கிறார். 

கடந்த மூன்று நான்கு வாரங்களில் தமிழ்நாட்டில், பெண்களுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகள், ஆறு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கற்பழிக்கிறார்கள், ஆசிரியர்கள் குழந்தைகளை பாலியல் வன்புணர்ச்சி செய்கிறார்கள், ஏழு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை கூட்டு வன்புணர்ச்சி செய்கிறார்கள். இது பிஹார், உத்தரபிரதேசத்தில் நடந்த செய்தி கிடையாது, நம்மளுடைய தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள். இதை முதலமைச்சர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார். அதேபோல காவல் துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் தமிழ்நாட்டில் கஞ்சா, போதை உச்சத்தில் இருப்பது தான் முக்கிய காரணம். 

Advertisment
Advertisements

நான் பள்ளிக் கூடம் படிக்கும் போது பள்ளிக் கூட வாசலில், மாங்காய், கமரக்கட்டு, புளிப்பு மிட்டாய் போன்றவைகள் விற்கப்படும், தற்போது பள்ளிக்கூட வாசலில் கஞ்சா பொட்டலம், போதை மாத்திரை விற்கப்படுகிறது. பள்ளிக் கூட வாசலில் அமெரிக்காவில் என்ன கிடைக்கிறதோ, அபின், கொகைன், ஹெராயின் போன்ற போதைப் பொருட்களில் என்ன வேண்டுமோ அது அத்தனையும் கிடைக்கிறது. இது அனைத்துமே காவல்துறைக்கு தெரிந்து தான் நடக்கிறது. கஞ்சா விற்கப்படுகிறது என்றால் அதை வாங்குபவனுக்கு எங்கு விற்கிறார்கள் என்று தெரியும்பொழுது அது குறித்த தகவல் காவல்துறைக்கு தெரியாதா என்ன? அதனால் இது அனைத்துமே அவர்களுக்கு தெரிந்து தான் நடக்கிறது. 

தமிழ்நாட்டின் பெயர் ஏற்கனவே கெட்டுப் போய்விட்டது, பெண்கள் தமிழ்நாட்டில் பயம் இல்லாமல் நடமாட முடியாத சூழல் இருக்கிறது. பகல் நேரங்களிலேயே பெண்கள் வெளியில் செல்ல முடியாத நிலைமை தமிழ்நாட்டில் உள்ளது. இதற்கெல்லாம் காரணம் முதலமைச்சரும் முதலமைச்சரின் கீழ் இயங்குகின்ற காவல்துறை மட்டும் தான். 

சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில், தி.மு.க மாவட்ட செயலாளர், அவர்களின் கட்சி கூட்டத்தில் பேசும்போது, தர்மபுரி கலெக்டர் மற்றும் எஸ்.பி ஆகியோர் என யாரும் என்னை கேட்காமல் எதுவும் செய்ய முடியாது நான் சொல்வது தான் சட்டம் என்று கூறுகிறார். மேலும் அதிகாரிகள் நான் சொல்வதை தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என பத்தாவது படித்த தி.மு.க மாவட்ட செயலாளர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு கட்டளை இடுகிறார். இதுதான் தமிழ்நாட்டில் திராவிட மாடலா? இதற்கும் முதலமைச்சர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் கூட இதையெல்லாம் முதலமைச்சர் சொல்லி தான் பேசுகிறேன் என அந்த மாவட்ட செயலாளர் கூறுகிறார், அதிகாரிகள் அடிபணியவில்லை என்றால் என்னிடம் கூறுங்கள் அந்த அதிகாரியை மாற்றம் செய்யலாம் எனக் கூறியதாக அவர் கூட்டத்தில் பேசுகிறார். இப்படி இருக்கும் போது தமிழ்நாடு எப்படிப்பட்ட மோசமான நிலைமையில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். 

அதே போல யூடியூபர் சவுக்கு சங்கர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரியை பேசும்போது எத்தனையோ வழக்குகள் போட்டு அவரை கைது செய்து சிறையில் வைத்தீர்கள். அப்படியானால் அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் உள்ளது? ஒரு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.,யும் கேவலப்படுத்துகிற தி.மு.க மாவட்ட செயலாளர் மீது ஏன் இன்றுவரை நடவடிக்கையோ ஒரு எஃப்.ஐ.ஆர் கூட போடவில்லை. 

தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளின் நிலைப்பாடாக உள்ளது. அதில் சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டு அவர்கள் அங்கே சட்டமன்றத்தில் நான்கு நாட்கள் வாதம் வைத்து இட ஒதுக்கீட்டை 63% விழுகாடாக உயர்த்தி இருக்கிறார்கள். அவர்கள் அங்கே செய்தது, இந்திய புள்ளியியல் சட்டம்-2008, படி சர்வே செய்தார்கள், சென்சஸ் எடுக்கவில்லை. பீகாரிலும் இதே போன்று சர்வே நடத்தி, பல நல்ல திட்டங்களை கொடுத்தார்கள். இட ஒதுக்கீடு கொடுத்தார்கள். அதற்கு சட்டமன்றத்தில் இட ஒதுக்கீடு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் கணக்கெடுப்பு நடத்தியதை பற்றி பிஹார் உயர்நீதிமன்றம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கர்நாடகாவில் நடத்தி முடித்து விட்டார்கள். ஆந்திராவில் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இவ்வளவு மாநிலங்களில் நடத்தி முடிக்கப்பட்டு சில மாநிலங்களில் நடத்தப்பட்டு கொண்டும் இருக்கிறது. 

ஆனால் தமிழ்நாட்டு முதலமைச்சர் மட்டும் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று எப்படி சொல்கிறார் என்று ஒன்றுமே புரியவில்லை. நாங்கள் சென்சஸ் கேட்கவில்லை, சர்வே மட்டும் தான் கேட்கிறோம். அந்த மத்திய அரசு சர்வேவில், ஓ.பி.சி என்ற ஒரு காலம் மட்டும் சேர்த்துக் கொள்ளும்படி நாங்கள் கேட்கிறோம். அதனால் மாநில அரசு எடுத்தால் தான் புள்ளி விவரம் துல்லியமாக தெரியும். அதுவும் சர்வே மூலமாகத் தான் தெரியும், அதனால் உண்மையான சமூக அக்கறை உள்ள ஒரு முதலமைச்சர் கணக்கெடுப்பு நடத்தி மக்களின் நிலை என்ன என்பதை புரிந்து கொண்டு இருப்பார். ஆனால் இதையெல்லாம் தெரிந்து கொள்ள ஆர்வம் இல்லாத ஒரு முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் அவர் இதற்கெல்லாம் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகிறார். இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கு இருக்கும் அதிகாரம் ஏன் தமிழ்நாட்டிற்கு இருக்காது. அதிகாரத்தில் இருந்து கொண்டு எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள் கோழைகள். 

தமிழ்நாட்டில் மிகவும் இரண்டு முக்கிய பிரச்சனைகள் உள்ளது. ஒன்று தொகுதி மறுசீரமைப்பு. இரண்டாவது மொழி பிரச்சனை. தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனையை எடுத்துக் கொண்டால், மார்ச் ஐந்தாம் தேதி தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுகிறார். அதில் பாட்டாளி மக்கள் கட்சியும் நிச்சயம் கலந்து கொள்ளும். இதில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. குறிப்பாக மத்திய அரசு இன்னும் அவர்களின் நிலைப்பாட்டை தெரிவிக்கவே இல்லை. மத்திய அரசு என்ன கொள்கை முடிவு எடுக்கப் போகிறார்கள் என்று தெரிவித்து அதற்கு ஏற்ப நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.  குறிப்பாக தென் மாநிலங்கள் குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை செயல்களையும் மிகச் சிறப்பாக செய்த காரணத்தால், தமிழ்நாட்டில் மற்ற தென் மாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. அதே வேளையிலே கடைசியாக இன்று இந்தியாவிலே 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கிறது. இந்த தொகுதிகள் 1971 ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தான் கணக்கெடுப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026ல் எடுத்தால் அதற்குப் பிறகு, தொகுதி மறுவரையறையில் என்ன செய்யப் போகிறார்கள் என தெளிவாக சொல்லவில்லை. 

கோவை வந்த அமித்ஷா கூறும் போது, தென் மாநிலங்களில் ஒரு சீட்டை கூட நாங்கள் குறைக்க போவதில்லை என்று கூறினார். எவ்வளவு அதிகப்படுத்துவோம் என கூறவில்லை, மத்திய அரசு அதிகப்படுத்தும் விழுக்காடு சமமாக இருக்க வேண்டும், என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் வேண்டுகோள். இன்றைய நாட்களில் தமிழகத்தின் மக்கள் தொகை 4 மடங்கு உயர்ந்து இருக்கிறது. நிச்சயமாக எண்ணிக்கையை உயர்த்த வேண்டும், ஆனால் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே அளவில் உயர்த்த வேண்டும். இதைத்தான் தென் மாநிலம் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். 

அதே போல இரண்டாவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் சமீபமாக, தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கவில்லை, என்றால் நிதியை வழங்க மாட்டோம் என கூறினார். இப்படி கூறுவது மிக மிக தவறானது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது. மத்திய பட்டியலில் கல்வி கிடையாது, அதில் இருக்கும் கொள்கைகளை ஏற்பதும், ஏற்காமல் போவதும் மாநில அரசின் உரிமை. இதில் யாரும் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. இந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும்தான் நிதி கொடுப்பேன் எனக் கூறுவது முற்றிலும் தவறானது.

இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என கூறலாம், ஆனால் இந்தியை கற்றுக்கொள்ள தான் வேண்டுமென திணிக்க கூடாது. தமிழ்நாடு இருமொழிக் கொள்கையை வைத்து இந்தியாவில் வளர்ந்த மாநிலமாக இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அதிக அளவில் ஜி.எஸ்.டி கட்டக்கூடிய இரண்டாவது இடத்தில் உள்ளது. இருமொழிக் கொள்கையில் எதுவும் பிரச்சனை இல்லாத பொழுது ஏன் மொழியை அவர்கள் திணிக்க வேண்டும். 

அதேபோல், முதலமைச்சரையும் நான் கேட்கிறேன் நீங்கள் இந்தி திணிப்பு வேண்டாம் என்று கூறுகிறீர்கள், அதே வேளையில் தமிழுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என நான் கேட்கிறேன். இந்தியாவில் தாய்மொழி படிக்காமல் பட்டம் வாங்குகிற ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். இது மிக பெரிய அவமானம். ஆனால் தமிழ்நாட்டில் தாய்மொழி படிக்காமலேயே முனைவர் பட்டம் வரை வாங்கலாம். தமிழ் பயிற்று மொழியாக கொண்டு வர வேண்டும் என 26 ஆண்டுகளுக்கும் மேலான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2016 ல் தமிழை ஒரு பாடமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை கலைஞர் கொண்டு வந்தார். ஆனால் இன்று வரைக்கும் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 

ஒன்றுமில்லாத பிரச்சனைகளுக்கு நீங்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்கிறீர்களே, தமிழ், தமிழ் என்று பேசக்கூடியவர்கள் தமிழுக்காக என்ன செய்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. தெலங்கானாவில் ரேவந்த் ரெட்டி, சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி போன்றவைகளில் கூட தெலுங்கை கட்டாயமாக பத்தாம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்று கூறுகிறார். பஞ்சாபில் பயிற்று மொழியே பஞ்சாபி தான் எனக் கொண்டு வந்து இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் நீங்கள் இதுபோல செய்ய முடியாதா? தேர்தல் வருவதால் இதை ஒரு ஆயுதமாக கையில் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் தமிழுக்கு என்று எதுவும் செய்யப் போவதில்லை. விளம்பரத்திற்காக இது போன்று மொழி பிரச்சனையை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

அதேபோல் மத்திய அரசு, நீங்கள் மும்மொழி கொள்கையை கடைப்பிடித்தால் மட்டும் தான் நிதி ஒதுக்குவோம் எனக் கூறுகிறார்கள், இந்த வேளையில் நான் முதலமைச்சராக இருந்தால், எனக்கு இந்த நிதி வேண்டாம் என்று நான் கூறி விடுவேன். இதற்கு இவ்வளவு நாடகம் நீங்கள் நடத்த தேவையே இல்லை. தேர்தல் நேரத்தில் இது போன்ற பிரச்சனைகள் செய்ய வேண்டும் என்பதற்காகவே செய்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார். 

மொழியை எதிர்க்கக் கூடிய தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக வைத்து இருக்கிறார்கள், ஆனால் அரசு பள்ளி மாணவர்களை வஞ்சிக்கிறார்கள் என அண்ணாமலை கூறுகிறாரே என்ற கேள்விக்கு, ”திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வரக் கூடியதற்கு முன்பாக தமிழ்நாட்டில் வெறும் இருபது தனியார் பள்ளிகள் மட்டுமே இருந்தது. இன்னைக்கு 55 விழுக்காடு பள்ளிக் கூடங்கள் தனியார் மையமாகத் தான் உள்ளது. இதற்கு தி.மு.க.,வும்., அ.தி.மு.க.,வும் மட்டுமே காரணம். ஏன் இவ்வளவு தனியார் பள்ளிக் கூடங்களை கொண்டு வந்தீர்கள். கல்வி என்பது என்னுடைய அடிப்படை உரிமை. அதை ஏன் தனியார் பள்ளிக் கூடங்களில் வியாபாரமாக்கினீர்கள். அதற்குக் காரணமே இந்த திராவிட கட்சிகள் மட்டும் தான். கல்வியை சேவையாக வழங்க யாரும் தயாராக இல்லை. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்து விட்டு இன்று கொள்கை என்று பேசுவது மிகவும் தவறானது. மத்திய அரசு கொண்டுவரக் கூடிய கொள்கையில் மூன்றாவதாக ஒரு இந்திய மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று தான் கூறுகிறார்கள். இந்தியை கற்றுக் கொள்வது தவறே இல்லை ஆனால் இந்தியை திணிக்க கூடாது. மற்ற மாநிலங்களில் தமிழ் கற்றுக் கொள்கிறார்களா, அவர்களுக்கெல்லாம் இரு மொழிக் கொள்கை நமக்கு மும்மொழிக் கொள்கையா என்று கேள்வி அன்புமணி எழுப்பினார்?

அனைத்து பள்ளிக் கூடத்தையும் அரசை ஏற்று நடத்துங்கள். எங்களிடம் ஆட்சியை விடுங்கள், அனைத்து பள்ளிக் கூடத்தையும் நாங்கள் அரசுடமையாக்கி காட்டுகிறோம். ஏழை, பணக்காரன் இல்லாமல் கொள்கையை நீங்கள் நடைமுறைப்படுத்துங்கள். ப்ரீ.கே.ஜி படிக்க எட்டு லட்சம் ரூபாய் ஆகிறது. ஒன்னாவதற்கு 10 லட்சம் ரூபாய், பத்தாவது படிக்க 15 லட்சம் ரூபாய். கல்வியை இவர்கள் வியாபாரமாக்கி விட்டார்கள். அதேபோல மத்திய அரசு, கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மாணவர்கள் படிக்க பணம் தருவீர்களா என அன்புமணி கேள்வி எழுப்பினார். 

அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டால் எது மாதிரியான கேள்வியை முன் வைப்பீர்கள் என்ற கேள்விக்கு, தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தினால், அனைத்து மாநிலத்திற்கும் ஒரே மாதிரியான சதவீதத்தில் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறினார். 
மேலும், அமல்படுத்துவதற்கு முன்பாக மாநில அரசு அழுத்தம் கொடுப்பது தவறு இல்லை. பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை ஒரு மொழிக் கொள்கை மட்டும்தான். தாய்மொழியில் கல்வியை கற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறோம். நோபல் விருது வாங்குபவர்கள் அவரவரின் தாய் மொழியில் படித்து விருது வாங்குபவர்கள் தான் என்று கூறினார். 

தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லாத மாநிலமாக இருக்கிறது என்ற கேள்விக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு மாநில ஆட்சி நடந்து கொண்டிருப்பது எங்களுக்கு மிகவும் அவமானமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் மற்றும் பழக்கம் அதிகமாகிவிட்டது. காவல்துறை இதில் கவனம் செலுத்தாமல் அரசியல் தலைவர்களை என்ன செய்யலாம் எப்படி வழக்கு போடலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது முதலமைச்சர் இன் கீழ் இயங்குகின்ற காவல்துறை, இவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது அதற்கு எவ்வளவு கூறினாலும், அரசாங்கத்திற்கு மக்களின் மீது பயமில்லை என்று கூறினார். 

கோயம்புத்தூரில் எடுத்துக் கொண்டாலும் கூட, MY V3 ads பிரச்சனை, 2200 கோடி மோசடி செய்திருக்கிறது ஒரு கும்பல். இது மோசடி செய்வதற்கு என்றே இருக்கிற ஒரு கும்பல். இவர்கள் ஏற்கனவே ஏமாற்றியவர்கள் என்ற வரலாறு இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி, இதை பலமுறை வெளிக் கொண்டு வந்து, போராட்டம் நடத்தி இருக்கிறார். அதற்காக ஏதோ ஒரு வழக்கை போட்டு இருக்கிறார்கள். ஆனால் அது அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. இதுதான் காவல் துறையின் லட்சணமா? விசாரணையின் மேல் இடத்தில் மூன்று அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். வழக்கு தொடுத்தவரின் மேலே வழக்கு போடுகிறீர்கள். தமிழ்நாடு காவல்துறை குற்றம் செய்தவர்களை பாதுகாத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள். அசோக் ஸ்ரீநிதி மீது பொய் வழக்கு போட்டு, கொடுமைப்படுத்துகிறார்கள், அதை திரும்ப பெறவில்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி மிகப்பெரிய போராட்டம் நடத்தும் என்று கூறினார். 

சீமான் குறித்த கேள்விக்கு, நிச்சயமாக யாராக இருந்தாலும் பெண்களை மதிக்க வேண்டும் என அன்புமணி கூறினார். தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு, தேர்தல் அடுத்த ஆண்டு வரப்போகிறதே வரும் போது அதை பற்றி அறிவிப்போம் எனக் கூறினார்.

Anbumani Ramadoss kovai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: