/indian-express-tamil/media/media_files/2024/11/24/2mslyd28HrMEqHEtcnwZ.jpg)
தமிழக அரசு தலையிட்டு, பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்), பி.எஸ்.சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளை பெரியார் பல்கலைக்கழகம் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்), பி.எஸ்.சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) ஆகிய புதிய பாடப்பிரிவுகளை தொழிற்துறையினரின் ஆதரவுடன் தொடங்க முடிவு செய்துள்ள பல்கலைக்கழக நிர்வாகம், இது குறித்து தொழில் நிறுவனங்களின் விருப்பத்தைக் கோரியிருக்கிறது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களை நடத்த பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரம் இல்லாத நிலையில், இந்தப் படிப்புகளை நடத்தி மாணவர்களின் எதிர்காலத்தை பெரியார் பல்கலைக்கழகம் வீணடித்து விடக்கூடாது.
ஏற்கனவே, 2023-24 ஆம் கல்வியாண்டில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) என்ற புதிய பாடப்பிரிவை ஸ்கோபிக் எஜுடெக் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தபோவதாக பெரியார் பல்கலைக்கழ்கம் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்தது. அப்போதே இத்தகையப் படிப்பை வழங்க பெரியார் பல்கலைக்கழகத்திற்கு தகுதி உண்டா? இந்தப் படிப்புக்கு அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? இந்தப் படிப்பு பட்டமேற்படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் தகுதியானது என்று ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? என்று பா.ம.க. வினா எழுப்பியிருந்தது.
பா.ம.க.,வின் வினாக்களுக்கு விடையளித்த தமிழக அரசு, தமிழக அரசு கொள்கையின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்வியை மட்டும் வழங்கும் கல்வி நிறுவனம் ஆகும். கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தால் பி.டெக் எனப்படும் தொழில்நுட்பக் கல்வியை வழங்க முடியாது என்று அறிவித்தது. மேலும் இந்தப் படிப்பை நிறுத்தும்படி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தாம் ஆணையிட்டிருப்பதாக சட்டப்பேரவையின் அன்றைய உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து அந்தப் படிப்பை சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கைவிட்டது.
அதன்பின் கல்விச் சூழலில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையில், புதியப் படிப்புகளை தனியாருடன் இணைந்து நடத்த பல்கலைக்கழகம் துடிப்பது ஏன்? இந்தப் படிப்பு நடைமுறைக்கு வந்தால் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் தனியார் நிறுவனம் தான் மேற்கொள்ளும். மாணவர்களிடமிருந்து பல்வேறு தலைப்புகளில் கட்டணம் தண்டல் செய்யும் தனியார் நிறுவனம், அதில் கல்விக் கட்டணமாக பெறப்படும் தொகையில் மட்டும் ஒரு பகுதியை பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிவிட்டு மீதமுள்ள தொகையை முழுமையாக எடுத்துக் கொள்ளும். அதற்காக பல்கலைக்கழகத்தின் பெயரையும், கட்டமைப்பு வசதிகளையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும். இத்தகைய முறை அனுமதிக்கப்பட்டால் அரசு பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாக்கப்படும். இதை தமிழக அரசு அனுமதிக்கப் போகிறதா?
இவை அனைத்துக்கும் மேலாக, அனைத்து வகையான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஓப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால் அத்தகைய ஒப்புதல் எதையும் பெறாமல் தொழில்நுட்பப் படிப்புகளை பெரியார் பல்கலைக்கழகம் வழங்கினால் அந்தப் படிப்பு செல்லாது. லட்சக்கணக்கில் பணம் கட்டி அந்தப் படிப்பை படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு, பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்), பி.எஸ்.சி (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளை பெரியார் பல்கலைக்கழகம் நடத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு பல்கலைக் கழகங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கல்வியை வணிகமாக்குவதையும் தடுக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.