Advertisment

நெல் கொள்முதல் அளவில் சரிவு; விலை உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் – அன்புமணி

நெல் சாகுபடி லாபமான ஒன்றாக இல்லாததால் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு அதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்

author-image
WebDesk
New Update
PMK leader Anbumani Ramadoss condemns TN govt to set up separate commission to raise bus fares Tamil News

தமிழகத்தில் நெல் கொள்முதல் அளவு தொடர்ந்து சரிந்து வருவதால் கொள்முதல் விலையை உயர்த்துவது உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் பருவம் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்து விட்ட நிலையில், நெல் கொள்முதல் அளவு 34.96 லட்சம் டன்னாக குறைந்து விட்டது. இது கடந்த 2022-23 ஆம் ஆண்டில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவான 44.22 லட்சம் டன்னை விட 9.26 லட்சம் டன், அதாவது 21% குறைவு ஆகும். தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் அளவு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குறைந்து வருவது கவலை அளிக்கிறது.

2022-23 ஆம் ஆண்டில் 58 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், 44.22 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 76% மட்டுமே. அந்த ஆண்டில் 120 லட்சம் டன் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், அதில் 36.85% அளவுக்கு மட்டுமே நெல் உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது.

ஆனால், அதையும் விட 2023-24 ஆம் ஆண்டில் நெல் கொள்முதல் குறைந்திருக்கிறது. காவிரியில் போதிய அளவு தண்ணீர் திறந்து விடப்படாததால் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது, சம்பா - தாளடி பயிர்களின் சாகுபடி பரப்பு குறைந்தது ஆகியவற்றை சுட்டிக்காட்டி கொள்முதல் அளவு குறைந்ததை நியாயப்படுத்த முடியாது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் 2023-24 ஆம் ஆண்டில் நெல் கொள்முதலுக்கான இலக்கு 50 லட்சம் டன்னாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதைக் கூட எட்ட முடியவில்லை. நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 69.92% மட்டும் தான் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. இது முந்தைய ஆண்டில் எட்டப்பட்ட கொள்முதல் அளவான 76 விழுக்காட்டை விட மிகவும் குறைவு ஆகும்.

தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கான காரணங்கள் என்னென்ன? என்பது கண்டறியப்பட்டு, அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அண்மைக்காலமாகவே நெல் சாகுபடி லாபமான ஒன்றாக இல்லாததால் நெல் சாகுபடி பரப்பு குறைந்து வருவதை தமிழக அரசு உணர்ந்து கொண்டு அதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் நெல்லில் 40% மட்டும் தான் அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான காரணங்களில் முதன்மையானது அரசால் வழங்கப்படுவதை விட தனியார் நெல் வணிகர்கள் அதிக விலைக்கு நெல்லை கொள்முதல் செய்வது; கொள்முதல் செய்வதற்கு முன்பாகவே அதற்கான விலையை உழவர்களுக்கு தனியார் வணிகர்கள் வழங்குவது; அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு, காத்திருக்க வைத்தல், சரியான நேரத்தில் கொள்முதல் விலையை வழங்காதது ஆகியவை ஆகும். இவற்றை சரி செய்யாமல் நெல் கொள்முதல் அளவை அதிகரிக்க முடியாது.

தமிழ்நாட்டில் வெளிச்சந்தையில் ஒரு கிலோ சன்னரக அரிசி ரூ.80 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு குவிண்டால் நெல்லில் இருந்து 68 கிலோ அரிசி உற்பத்தி செய்ய முடியும். அப்படியானால் ஒரு கிலோ சன்னரக அரிசி உற்பத்தி செய்யத் தேவைப்படும் 1.47 கிலோ நெல் தேவை. அதன்படி பார்த்தால் ஒரு கிலோ சன்னரக நெல்லின் மதிப்பு ரூ.53 ஆகும். அரிசிக்கான உற்பத்திச் செலவு, சந்தை லாபம் ஆகியவற்றுக்காக மூன்றில் ஒரு பங்கை ஒதுக்கி விட்டாலும் கூட ஒரு கிலோ நெல்லுக்கு ரூ 35.33 வீதம் குவிண்டாலுக்கு ரூ.3533 வழங்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் சன்னரக நெல்லுக்கு கொள்முதல் விலையாக ரூ. 2310 மட்டுமே வழங்கப்பட்டது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.

கடந்த ஆண்டில் தனியார் நெல் வணிகர்கள் குவிண்டாலுக்கு ரூ.2,500 முதல் ரூ.2,700 வரை கொள்முதல் விலை வழங்கியதுடன், உழவர்களின் களத்துக்கே சென்று நெல்லை கொள்முதல் செய்தனர். அதனால், உழவர்களுக்கு கைமீது அதிக தொகை கிடைத்ததால் பெரும்பான்மையான உழவர்கள் தனியாரிடம் நெல்லை விற்பனை செய்தனர். அரசின் நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கு இதுவும் முக்கியக் காரணம் ஆகும். இதை தமிழக அரசு உணர வேண்டும்.

தமிழ்நாடு அரிசி உற்பத்தியில் இன்னும் தன்னிறைவு பெறவில்லை. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 91 லட்சம் டன் அரிசி தேவைப்படும் நிலையில், 72 லட்சம் டன் அரிசி மட்டும் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. அதனால், பொன்னி அரிசிக்கு ஆந்திரா, கர்நாடகத்தை நாம் நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதை மாற்றி தமிழகத்தில் அரிசி சாகுபடி பரப்பையும், உற்பத்தியையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 வழங்க வேண்டும் என்பது தான் உழவர்களின் கோரிக்கை ஆகும். ஆனால், நேற்று முதல் தொடங்கியுள்ள கொள்முதல் பருவத்தில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையான 2320 ரூபாயுடன் ரூ.130 ஊக்கத்தொகை சேர்த்து ரூ.2450 மட்டும் தான் வழங்கப்படுகிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல. எனவே, உழவர்கள் நலனையும், தமிழ்நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையில் அளவை தமிழக அரசு உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamilnadu Anbumani Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment