Advertisment

'இத்தோடு அவர் நிறுத்திக்கணும், எங்களுக்கும் பேசத் தெரியும்': திருமாவுக்கு அன்புமணி எச்சரிக்கை

"பா.ம.க. உடன் எங்களுக்கு கசப்பான அனுபவங்கள் இருப்பதால் அவர்களை மாநாடுக்கு அழைக்கவில்லை." என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியிருந்தார்.

author-image
WebDesk
New Update
PMK leader Anbumani Ramadoss warning to VCK leader Thol Thirumavalavan Tamil News

"மது ஒழிப்பில் பா.ம.க பிஎச்.டி படித்துள்ளது, ஆனால் திருமாவளவன் இப்போதுதான் எல்.கே.ஜி வந்துள்ளார்." என்று அன்புமணி கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அ.தி.மு.க-வும் பங்கேற்கலாம் என வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்தார். இதேபோல், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அவர் அழைப்பு விடுத்தார். 

Advertisment

திருமாவளவன் தலைமையிலான வி.சி.க திமுக கூட்டணியில் அங்கம் வகித்து சூழலில், அக்கட்சியின் தலைவர் அ.தி.மு.க மற்றும் த.வெ.க-வுக்கு அழைப்பு விடுத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இந்த மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆட்சி, அதிகாரம் குறித்து தான் பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் திடீரென பகிர்ந்தார். வீடியோவை பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே அது எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. திருமாவளவன் திடீரென ஆட்சி, அதிகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, பின்னர் நீக்கிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர், "வீடியோ பதிவை அட்மின் வெளியிட்டு இருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியாது. அவரிடம் விசாரித்து சொல்கிறேன். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது நீண்டகாலமாக நாங்கள் வைக்கும் கோரிக்கைதான். புதிதாக எதையும் சொல்லவில்லை." என்று விளக்கமளித்தார். 

இதனைத் தொடர்ந்து, மதுரை அவனியாபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய திருமாவளவன், "தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த காலத்தில் இருந்து மது ஒழிப்பு குறித்து பேசி வருகிறோம். கடைசி மனிதனுக்கும் ஜனநாயகம், எளிய மக்களுக்கும் அதிகாரம் என 1999 ஆம் ஆண்டு பேசினேன். அதை நினைவு படுத்தி நேற்று செங்கல்பட்டில் நான் பேசியதை என் அட்மின் எடுத்து பதிவு செய்துள்ளார்கள். சமூக வலைதளத்தில் நீக்கம்செய்யப்பட்டது பழைய வீடியோ இல்லை, நேற்று பேசியது தான். 2 அட்மின்கள் உள்ளார்கள். ஒருவர் வீடியோவை பதிவு செய்துள்ளார். ஒருவர் நீக்கியுள்ளார். ஆனால் ஏன் அதை நீக்கினார் என்பது குறித்த விளக்கம் இன்னும் அவரிடம் கேட்கப்படவில்லை.

அதிகாரம் எளிய மக்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பது தான் எப்போதும் எங்கள் கோரிக்கை. ஜனநாயக பரவலாக்கத்தை எப்போதும் பேசலாம். எனக்கு உண்மையில் அரசாங்கத்தில் பங்கு வேண்டும் என நினைத்திருந்தால் தேர்தல் நேரத்தில் கேட்டிருப்பேன். இப்போது கேட்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டை முடிச்சு போட கூடாது. காவிரி நீர், ஈழ தமிழர் விவகாரங்களில் அனைவரும் இணைவது போல் இந்த விவகாரத்திலும் இணையலாம். பா.ம.க. உடன் எங்களுக்கு கசப்பான அனுபவங்கள் இருப்பதால் அவர்களை மாநாடுக்கு அழைக்கவில்லை. இப்போதும் நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தான் உள்ளோம். கூட்டணியில் தான் தொடர்கிறோம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை" என்று கூறி இருந்தார்.

எச்சரிக்கை 

இந்த நிலையில், பா.ம.க குறித்து வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் பேசியது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பதில் கொடுத்துள்ளார். மேலும், 'பா.ம.க-வை இழிபடுத்தி பேசிவரும் திருமாவளவன் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்' என்றும் கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், திருமாவளவன் பா.ம.க-வை சாதி கட்சி என்கிறாரே? என்கிற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்புமணி, 'விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் என்ன கட்சியாம்?' என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், பா.ம.க சமூக நீதிக்காக தொடங்கப்பட்ட கட்சி. அருந்ததியர்கள் இஸ்லாமியர்கள் மிகவும் பிற்படுத்த பட்ட சமூகம் என 6 இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த கட்சி பா.ம.க. சுற்றுச் சூழலுக்காகவும், நீர் நிலைகளுக்காகவும், கல்விக்காகவும், மருத்துவத்திற்காகவும், மது ஒழிப்புக்காகவும், நேர்மையான ஆட்சிக்காகவும் போராடி வரக்கூடிய கட்சி பா.ம.க.

இப்படி எல்லாம் எத்தனையோ பல சாதனைகள் செய்த கட்சியை திருமாவளவன் தொடர்ந்து இழிவு செய்து வருகிறார். அதனை அவர் தவிர்க்க வேண்டும். இத்தோடு அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதேபோல் வி.சி.க-வை பற்றி தரகுறைவாக எங்களாலும் பேச முடியும். நீங்கள் மாநாடு நடத்தினால் நடத்திக் கொள்ளுங்கள். மது ஒழிக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

இந்தியாவில் எந்த கட்சி மது ஒழிப்பிற்கு எதிராக கூட்டம், மாநாடு நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம். எனவே அந்த அடிப்படையில் திருமாவளவன் எங்களை அழைத்தாலும் அடைக்காவிட்டாலும் நாங்கள் அந்த மாநாட்டை ஆதரிக்கிறோம். ஏனென்றால் இது எங்களின் கட்சியின் அடிப்படை கொள்கை. மது ஒழிப்பில் பா.ம.க பிஎச்.டி படித்துள்ளது, ஆனால் திருமாவளவன் இப்போதுதான் எல்.கே.ஜி வந்துள்ளார்.

அவர் தற்போது தான் மது ஒழிப்பை தொடங்கி இருக்கிறார். ஆனால் எங்கள் நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக இருந்தே மது எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தவர். மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்று பா.ம.கவை சேர்ந்த 15,000 பெண்கள் சிறைக்கு சென்று இருக்கிறார்கள்.

பா.ம.க தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்கள் காரணமாக தமிழ்நாட்டில் 3,321 மதுக்கடைகளையும் இந்திய அளவில் 90 ஆயிரம் மது கடைகளையும் மூடி உள்ளோம். தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை நேரத்தை குறைக்க பா.ம.க தான் முயற்சி மேற்கொண்டது. திருமாவளவன் தன்னுடைய மது ஒழிப்பு மாநாட்டிற்கு கனிமொழியை அழைக்க வேண்டும். அவர்தான் மது ஒழிப்பிற்கு எதிராக பேசுகிறார்.

மதுவினால் ஏற்படும் சீரழிவுகள் பற்றி விளக்கி அவரை தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி நடவடிக்கை எடுக்க சொல்லுங்கள். தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு இருந்திருந்தால் முதலில் அவர் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். 

அமைச்சரவையில் பங்கு என்ற திருமாவளவனின் வீடியோ பதிவு மிகவும் சரியானது. அதே நேரத்தில் அந்த வீடியோவை நீக்கியது தான் தவறு. அனைத்து கட்சிகளும் தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும். தங்களுடைய கொள்கைகளை அமல்படுத்த வேண்டும் என்று தான் கட்சி ஆரம்பிக்கிறார்கள். எனவே, திருமாவளவனின் கருத்தில் தவறு இல்லை. 

ஒருபுறம் திருமாவளவன் மதுவை ஒழிக்க வேண்டும் என்கிறார். மறுபுறம் மது ஆலையின் உரிமையாளர்களுக்கு தேர்தலில் பிரச்சாரம் செய்கிறார். மதுவை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எதற்காக மது உற்பத்தி செய்யும் ஆலைகளின் உரிமையாளர்களான டி.ஆர் பாலு மற்றும் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். இந்த இரண்டு தி.மு.க எம்.பி-களும் தமிழக அரசு கடைகளுக்கு 40 சதவீதம் மதுவை சப்ளை செய்கிறார்கள். " என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Thirumavalavan Vck Anbumani Ramadoss Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment