பாமக நிறுவனர் ராமதாஸ் அண்ணாவின் மதுவிலக்கு உறுதியும், தம்பிகளின் மது ஆலைகள் திறப்பும் என்ற தலைப்பில் இன்று தமிழ்நாட்டில் இருக்கும் 11 மது ஆலைகளில் 7 மது ஆலைகள் திமுகவுக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணியில் இருந்தாலும் குடைச்சல் கொடுப்பதை நிறுத்தமாட்டார். அதிலும் எதிர்க்கட்சி என்றால் புரட்டி எடுப்பார். 2006-2011 திமுக ஆட்சியில் இருந்தபோது பாமக ஆதரவு அளித்தது. அப்போது கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். தமிழ்நாடு அரசு ஒரு பட்ஜெட் தாக்கல் செய்கிறது என்றால் பாமக சார்பில் பொதுவில் ஒரு பட்ஜெட்டை வெளியிடுவார். விமர்சனங்களை ஊசி போல ஏற்றுவார்.
கடந்த 10 ஆண்டுகளாக பாமக திமுக கூட்டணியில் இருந்து விலகியே இருக்கிறது. இந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் பாமக கூட்டணி வைக்க முடியாத நிலையே உள்ளது. அதிமுக கூட்டணியிலும் நல்ல விஷயங்களைப் பாராட்டுவார். விமர்சனங்களையும் முன்வைப்பார்.
பாமக தொடர்ந்து தமிழ்நாட்டில் மது விலக்கு கொள்கையை வலியுறுத்திவரும் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மதுவிலக்கு பற்றி விவாதிக்கப்பட்ட அளவுக்கு 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மது விலக்கு பற்றி வாக்குறுதிகளோ விவாதங்களோ எதுவும் இல்லை. 2016-ல் கிட்டத்தட்ட திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மது விலக்கு பற்றி பேசினார்கள். அதிமுக படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று கூறியது. ஆனால், கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் அமல்படுத்தப்படாமலே போனது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கொரோனா இரண்டாவது அலை காரணமாக 2வது முறையாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது மதுக் கடைகள் திறக்கப்பட்டன. அதிமுக இதே போலதான் செயல்பட்டது. ஆனாலும், பாமக தொடர்ந்து மது விலக்கை வலியுறுத்தி வருகிறது. அக்கட்சி வன்னியர்களின் தனி இட ஒதுக்கீடு போராட்டத்துக்கு அளித்த அழுத்தம் அளவுக்கு மது விலக்கு கோரிக்கைக்கு அளிக்கவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.
இந்த சூழலில்தான், அண்ணாவின் மது விலக்கு உறுதியும் தம்பிகளின் மது ஆலைகள் திறப்பும் என்ற தலைப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் திமுகவை விமர்சித்து ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இன்று தமிழ்நாட்டில் இருக்கும் 11 மது ஆலைகளில் 7 மது ஆலைகள் திமுகவுக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்று திமுகவுக்கு சூடு வைத்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அண்ணாவின் மது விலக்கு உறுதியும்
தம்பிகளின் மது ஆலைகள் திறப்பும் என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருப்பதாவது:
“அன்று அண்ணா - மதுவை தடுத்த வரலாறு!
தமிழ்நாட்டில் 1948-ஆம் ஆண்டு முதல் முழுமையான மதுவிலக்கு நடைமுறையில் இருந்து வந்தது. 1967-ஆம் ஆண்டில் அண்ணா தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது. அப்போது கடுமையான நிதி நெருக்கடி நிலவியது. நிலைமையை சமாளிக்க மதுக்கடைகளை திறக்கலாம் என்று அதிகாரிகள் யோசனை தெரிவித்தனர். ஆனால், அதை ஏற்க அண்ணா மறுத்து விட்டார். “அரசின் வருமானத்திற்காக மது விலக்கை ரத்துச் செய்வது மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவதற்கு ஒப்பானது!” என்று கூறினார். அதுமட்டுமின்றி, “மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம்”என்றும் கூறி மதுவிலக்குக் கொள்கையில் தமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.
‘மதுவிலக்கு இல்லாவிட்டால், நிலைகுலைந்து தள்ளாடும் நபர்களை பார்க்க நேரிடும். இப்போது அது இல்லை. இந்த நிலையை நான் வரவேற்கிறேன். இன்று எத்தனையோ குடும்பங்களின் மகிழ்ச்சிக்கு, தாய்மார்களின் மகிழ்ச்சிக்கு மதுவிலக்கே காரணம்’ என்று கூறி மதுக்கடைகளை திறக்கும் யோசனையை அண்ணா நிராகரித்தார்.
இன்று - மதுவுக்கு சாமரம்
அண்ணாவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் 1971-ஆம் ஆண்டில் மதுக்கடைகளை திறந்தார். அதுமட்டுமின்றி 2006 -11 ஆட்சிக் காலத்தில் 5 புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளித்தார். தமிழ்நாட்டில் இப்போது செயல்பாட்டில் உள்ள 11 மது ஆலைகளில் 7 மது ஆலைகள் திமுகவுக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது!” என்று விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.