Advertisment

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு நிதி குறைப்பை ஏற்க முடியாது; ராமதாஸ் கண்டனம்

ரயில்வே திட்டங்கள் தொடர்பாக மத்திய – மாநில அரசுகள் ஒன்றை ஒன்று குறை கூறுவதை கைவிட்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

author-image
WebDesk
New Update
PMK Leader Ramadoss conform mukundan as youth wing leader Tamil News

தமிழ்நாட்டில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தொடர்வண்டித் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு பதிலாக குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;

”நிதி ஒதுக்கீடு குறைப்பை ஏற்க முடியாது: தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி வேண்டும்- 5 ஆண்டுகளில் பணிகளை முடிக்க வேண்டும்! 

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் தொடர்வண்டித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இடைக்கால நிதிநிலை அறிக்கையுடன் ஒப்பிடும் போது, திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள தொடர்வண்டித் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு பதிலாக குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. 

Advertisment
Advertisement

புதிய தொடர்வண்டித் திட்டங்களுக்காக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.875 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் வெறும் ரூ. 246 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது 70% குறைவு ஆகும். திண்டிவனம் - நகரி புதிய பாதைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.350 கோடியில் இருந்து ரூ.153 கோடியாகவும், தருமபுரி - மொரப்பூர் திட்டத்திற்கு ரூ.115 கோடியில் இருந்து ரூ.49 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய பாதை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி, சென்னை - புதுச்சேரி - கடலூர் கிழக்கு கடற்கரை தொடர்வண்டிப் பாதை திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ.25 கோடி மற்றும் மூன்று இரட்டைப் பாதை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தலா ரூ.150 கோடி குறைக்கப்பட்டு வெறும் ரூ.1000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. 

தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள தொடர்வண்டித் திட்டங்கள் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் தொடர் வண்டித்துறையின் இணை அமைச்சர்களாக இருந்த போது அறிவிக்கப்பட்டவை ஆகும். மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள வட மாவட்டங்களில் அனைத்துத் துறை வளர்ச்சியையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்தத் திட்டங்களை பா.ம.க போராடி கொண்டு வந்தது. ஆனால், இந்தத் திட்டங்களுக்கு 15 ஆண்டுகளாக சொல்லிக் கொள்ளும்படி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ஓரளவு நிதி ஒதுக்கப்பட்டது ஆறுதல் அளித்த நிலையில் அதையும் குறைத்திருப்பது தமிழகத்தில் தொடர்வண்டித்துறை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். 

தொடர்வண்டித் திட்டங்கள் மாநிலங்கள் மற்றும் மாநிலங்கள் வழியாக ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியவை ஆகும். ஒரு மாநிலத்திற்கான தொடர் வண்டித் திட்டங்களை செயல்படுத்தாமல் புறக்கணித்து விட்டு, நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்ய முடியாது. ஒருபுறம் மத்திய அரசு மிகக் குறைந்த நிதியை ஒதுக்கும் நிலையில், இன்னொருபுறம் திட்டத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தி தராமல் மாநில அரசு தாமதம் செய்கிறது. இந்த விஷயத்தில் இரு அரசுகளும் ஒன்றை ஒன்று குறை கூறுவதை கைவிட்டு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள தொடர்வண்டி திட்டங்கள் அனைத்தையும் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தி முடிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் வகுத்து, அதன்படி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Indian Railways Dr Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment