/indian-express-tamil/media/media_files/2025/07/03/ramadoss-2025-07-03-11-42-45.jpg)
பா.ம.க அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செயல் தலைவர் அன்புமணி நீக்கம் செய்யப்படுவதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸூக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கும் இடையேயான கருத்து மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழலில் கடந்த மாதம் 17 ஆம் தேதி ராமதாஸ் தலைமையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. மேலும், அதற்கு அன்புமணி 31 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் அன்புமணி பதில் அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து கடந்த 4 ஆம் தேதி தைலாபுரத்தில் பா.ம.க. மாநில நிர்வாக குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராமதாஸ் கூறுகையில், ”அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு அவர் வருகிற 10 ஆம் தேதிக்குள் (அதாவது செப்டம்பர் 10) உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்றால், அன்புமணி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பதில் அளிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், ராமதாஸ் இன்று (செப்டம்பர் 11) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய ராமதாஸ், “கட்சியின் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து மருத்துவர் அன்புமணி நீக்கப்படுகிறார். பல கட்ட விசாரணைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க 2 முறை அவகாசம் வழங்கியும் அதற்கு பதில் அளிக்காததால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். பா.ம.க தலைமைக்கு கட்டுப்படாத, தான்தோன்றித்தனமாக, அரசியல்வாதி என்பவருக்கு தகுதியற்றவராகவே செயல்பட்டு வருகிறார் அன்புமணி.
இதனால் பா.ம.க. செயல் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கப்படுவதுடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுகிறார். அன்புமணியுடன் பா.ம.க நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. மீறி தொடர்பு வைத்தால் கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும். அன்புமணியுடன் இருப்பவர்கள் மீது வருத்தம் இருந்தாலும், அவர்களை மன்னிக்க தயாராக இருக்கிறேன். அன்புமணியோடு இருந்தால் பலன் கிடைக்கும் என்று அவர்கள் அங்கு இருந்திருக்கலாம்.
தேவைப்பட்டால் அன்புமணி தனிக் கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம். தனி மனிதன் ராமதாஸ் ஆரம்பித்த கட்சி இந்த பா.ம.க. இதில் உரிமை கொண்டாட யாருக்கும் உரிமையில்லை. மகனாகவே இருந்தாலும் இந்தக் கட்சியை உரிமைக் கொண்டாட உரிமையில்லை. ஒரு பயிரிட்டால் களை முளைக்கத்தான் செய்யும். அதற்காக யாரும் பயிரிடாமல் இல்லை. களையை நீக்கி விட்டோம். குந்தகம் விளைப்பிப்போரை கட்சியில் இருந்து நீக்கி விட்டோம்,” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.