விக்கிரவாண்டி தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ மறைந்ததைத் தொடர்ந்து, அந்த தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை மாதம் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளதால், விக்கிரவாண்டி இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அ.தி.மு.க அறிவித்தது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு பா.ம.க சார்பில் சி. அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பா.ம.க வேட்பாளர் சி. அன்புமணி புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மாம்பழம் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பா.ம.க. சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கடந்த பல தேர்தல்களில் பா.ம.க. மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. அதனால், இந்த தேர்தலிலும் பா.ம.க.வுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது மட்டுமில்லாமல், 4.23 சதவீத வாக்குகளை பெற்று மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது.
பா.ம.க மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்ததால், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் மாம்பழம் சின்னத்தைக் கேட்டு பெற வேண்டியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“