/indian-express-tamil/media/media_files/2025/09/15/anbumani-ramadoss-2025-09-15-13-13-37.jpg)
பா.ம.க தலைவர் அன்புமணி; தேர்தல் ஆணையம் அங்கீகார கடிதம்: வழக்கறிஞர் பாலு பேட்டி
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சி மற்றும் அதன் சின்னமான மாம்பழம் யாருக்கு சொந்தம் என்ற விவாதம் தீவிரமாக நடந்துவருகிறது. இந்த சூழலில், பா.ம.க. வழக்கறிஞர் பாலு, அன்புமணிக்கு ஆதரவாகப் பேட்டி அளித்துள்ளார்.
பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், "அன்புமணி தலைமையில் நடந்த பா.ம.க பொதுக்குழு கூட்டத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. இதன்மூலம் கட்சிக்குள் இருந்த குழப்பங்கள் தீர்ந்துவிட்டன. சென்னை தியாகராயர் நகரில் உள்ள பா.ம.க. அலுவலகத்தை, பா.ம.க.வின் தலைமைத் தேர்தல் அலுவலகமாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது," என்று தெரிவித்தார்.
அன்புமணிக்கே மாம்பழம் சின்னம்?
வழக்கறிஞர் பாலு மேலும் கூறுகையில், "அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்வோர் மட்டுமே பா.ம.க.வின் கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த முடியும். எதிர்காலத்தில் பா.ம.க.வை அன்புமணி வழிநடத்தும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளது. அன்புமணியை ஏற்பவர்கள் மட்டுமே மாம்பழச் சின்னத்தில் போட்டியிட முடியும்," எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையம் அன்புமணிக்கு அனுப்பிய அங்கீகாரக் கடிதத்தையும் அவர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
ராமதாஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அன்புமணி ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அதேசமயம், ராமதாஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழியும் தாங்கள் ராமதாஸுக்கே ஆதரவு எனத் தெரிவித்துள்ளார். கட்சியை உருவாக்கி வளர்த்த ராமதாஸிடமிருந்து மாம்பழச் சின்னம் பறிக்கப்படுவது அவரது ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், அடுத்து ராமதாஸ் என்ன செய்யப்போகிறார்? மாம்பழச் சின்னத்தை மீண்டும் பெற அவர் எடுக்கும் நடவடிக்கைகள் என்னவாக இருக்கும்? என்பதே தற்போது முக்கிய கேள்வியாக மாறியுள்ளது.
இந்த உட்கட்சி மோதலைத் தீர்க்க, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும், இரு தரப்பினரும் இணக்கமாகச் செல்வதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. வரவிருக்கும் தேர்தலில் இரு தரப்பினரும் தனித்தனியே களமிறங்குவதை, பா.ம.க. தொண்டர்கள் மட்டுமின்றி, அவர்களை கூட்டணிக்குள் கொண்டு வர விரும்பும் பிற கட்சிகளும் விரும்பவில்லை. இந்த சூழலில், அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.