scorecardresearch

திருச்சி- சென்னை சாலையில் அதிக விபத்துகளுக்கு காரணமே இதுதான்: அன்புமணி அறிக்கை

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை 22 ஆண்டுகளாக மேப்படுத்தவில்லை. இந்த சாலை 4 வழி சாலையாக உள்ளது. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தினமும் குறைந்தபட்சம் 1.40 லட்சம் வாகனங்கள் செல்லும் இந்த சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி- சென்னை சாலையில் அதிக விபத்துகளுக்கு காரணமே இதுதான்: அன்புமணி அறிக்கை

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று(நவம்பர் 29) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை – திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆண்டுகளில் 6,131 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றில் 2,076 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற புள்ளிவிவரம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. உயிர்களை பலிவாங்கும் சாலையாக மாறியுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

இந்த விபத்துகளுக்கு முக்கிய காரணம் சாலைகளில் போதுமான அளவில் சேவை சாலைகள் இல்லாததும், சாலைகளின் வடிவமைப்பு மிகவும் மோசமாக இருப்பதும் தான்.
சாலை விபத்துகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட, அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழையும் போது, அதிவேகத்தில் வரும் வாகனங்களுடன் மோதுவது தான் முக்கிய காரணம் என்று ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை

தமிழ்நாட்டின் மிக முக்கிய முதன்மையான சாலை சென்னை – திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலை தான். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், காவிரி பாசன மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், வடக்கு தமிழகத்தின் சில மாவட்டங்கள் என தமிழ்நாட்டின் 80% பகுதிகளில் இருந்து சென்னை வருவதற்கு இந்த சாலை தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் போதிலும், அதற்கான நடவடிக்கைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் மேற்கொள்ளாதது தான் விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும்.

சென்னை-திருச்சி இடையிலான இப்போதைய 4 வழிச்சாலை 2000-ஆவது ஆண்டில் அமைக்கப்பட்டது ஆகும். அதன்பின்னர் 22 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்று வரை அந்த சாலை மேம்படுத்தப்பட வில்லை. பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரை மட்டும் 8 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

4 மடங்கு வாகனங்கள்

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக உயர்த்தப்பட்டபோது, அது தினமும் 35 ஆயிரம் வாகனங்கள் பயணிக்கும் திறன் கொண்டதாக இருந்தது. அப்போது அதைவிட குறைவான வாகனங்கள் தான் அந்த சாலையில் பயணித்தன. ஆனால், இப்போது சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்தபட்சம் 1.40 லட்சம் வாகனங்கள் தினமும் பயணிக்கின்றன. இது அதன் கொள்ளளவை விட 4 மடங்கு அதிகம் ஆகும்.

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்தும் கூட, அது குறைந்தபட்சம் 6 வழிச்சாலையாகவோ, 8 வழிச்சாலையாகவோ மேம்படுத்தப்படாதது தான் விபத்துகள் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாகும். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையை கடப்பதற்கு சுரங்கப் பாதைகளோ அல்லது மேம்பாலங்களோ கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 22 ஆண்டுகளில் ஒரு சில இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் இத்தகைய கட்டமைப்புகள் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

அதற்காக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச் சாலையாக மேம்படுத்த வேண்டும். அந்த சாலையில் தேவையான இடங்களில் சேவை சாலைகளையும், குறிப்பிட்ட தொலைவுக்கு ஓரிடத்தில் வாகனங்கள் அந்த சாலையில் இணையவும், வெளியேறவும் வசதிகள் செய்யப்பட வேண்டும். இதற்கான திட்டங்களை வகுத்து விரைவாக சாலை கட்டுமானப் பணிகளை தொடங்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Pmk president anbumani urges to take steps to change trichy chennai highways to 8 lane road