திருவண்ணாமலை அருகே நாயுடுமங்கலம் கூட்டு சாலையில் இருந்த வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமையில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், நாயுடுமங்கலம் கூட்டுசாலையில் வைக்கப்பட்டிருந்த வன்னியர்களின் அக்னி கலசம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சையானது.
இதையடுத்து, நாயுடு மங்கலம் கூட்டு சாலையில், வன்னியர் சங்கத்தின் அக்னி கலசம் அகற்ப்பட்டதைக் கண்டித்து வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமையில் நாயுடுமங்கலம் கூட்டுசாலைப் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், பெரிய அளவில் பாமகவினர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அதிகாரிகள் அக்னி கலசத்தை ஏற்கெனவே இருந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
போராட்டத்துக்கு தலைமை வகித்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி, போராட்டத்தில் கலந்துகொண்ட பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தினரிடம் கூறுகையில், “அமைதியை உருவாக்க வேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகள், எல்லா மக்களும் அமைதியாக நன்றாக வாழ்வதற்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டிய வருவாய்த்துறை அதிகாரிகள், இங்கே இருந்த அக்னி கலசத்தை இரவோடு இரவாக திருடர்களைப் போல எடுத்துச் சென்றுவிட்டார்கள். தமிழ்நாட்டில் எத்தனையோ திருட்டு நடக்கிறது. அதில் இந்த அக்னி கலசம் திருட்டும் ஒன்று. மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் அக்னி கலசம் ஏற்கெனவே இருந்த இடத்திலேயே வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"