பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, சேலம், கரூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதானியை சந்தித்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிக்கை வெளியிட்டிருந்தார். டாக்டர் ராமதாஸின் அறிகையை சுட்டிக்காட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஊடகங்கள் கருத்து கேட்டதற்கு, அவருக்கு வேறு வேலை இல்லை, தினமும் ஒரு அறிக்கை விட்டுக்கொண்டிருப்பார். அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காட்டமாக பதிலளித்தார்.
டாக்டர் ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை, அவருடைய அறிக்கைக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதற்கு கண்டனம் தெரிவித்த பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், மூத்த அரசியல் தலைவர் ராமதாஸை அவமதிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணவத்துடன் பேசுவது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல என்றும், டாக்டர் ராமதாஸ் குறித்து பேசியதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இல்லாவிட்டால், எங்கள் பா.ம.க தொண்டர்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
டாக்டர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு, பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, சேலம், கரூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைக் கண்டித்து பா.ம.க-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க-வினரை போலீசார் கைது செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“