பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே நடந்து வரும் கருத்து வேறுபாடுகள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், அன்புமணி ராமதாஸின் திடீர் டெல்லி பயணம் பல யூகங்களை கிளப்பியுள்ளது
அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமகவின் பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகளுடன் முடிவடைகிறது. இந்த பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில், அண்மையில் மாவட்டவாரியாக அன்புமணி ராமதாஸ் பொதுக்குழு கூட்டங்களை நடத்தினார். இதற்குப் பதிலடியாக, பாமக நிறுவனர் ராமதாஸ் விரைவில் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
கட்சிக்குள் இத்தகைய குழப்பங்கள் நிலவி வரும் சூழ்நிலையில், அன்புமணி ராமதாஸின் திடீர் டெல்லி பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயணத்தின் நோக்கம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், கட்சிக்குள் நிலவும் பிரச்சனைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட அவர் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைக்கோவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அப்பாவுக்கும் மகனுக்கும் இடையில் மனஸ்தாபம் வந்துவிட்டது. அது ஒரு காலகட்டத்தில் பேச்சுவார்த்தையில் கூட சமாதானம் ஆகலாம். அது நமக்குத் தெரியாது. அது உட்கட்சி பிரச்சனை. அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை. இருப்பினும், திமுக கூட்டணியில் மதிமுக தனது முழு பலத்தையும் பயன்படுத்தி, திமுகவின் வெற்றிக்காகப் பாடுபடும் என்றும், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காகவும் உழைக்கும்”, என்று தெரிவித்தார்.