/indian-express-tamil/media/media_files/2025/05/31/257vohizKvLXAj4fCiWA.jpg)
PMK Ramadoss Anbumani Ramadoss Internal conflict
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், தலைவருமான அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதலை உடனடியாக நிறுத்தக் கோரி, தைலாபுரத்தில் உள்ள ராமதாஸின் இல்லம் முன்பு பா.ம.க. தொண்டர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஐந்து மாதங்களாக ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது இருவருக்கும் இடையிலான மோதலை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இந்த உட்கட்சி பூசல் காரணமாக பா.ம.க.வில் கடும் நெருக்கடி நிலவி வருகிறது.
ஒருபுறம், அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னையில் மூன்று நாட்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அவர் மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து, நிலைமையை சீராக்க முயற்சித்து வருகிறார்.
மறுபுறம், டாக்டர் ராமதாஸ் முன்னாள் மாவட்டச் செயலாளர்களைச் சந்தித்து வருகிறார். மேலும், அவர் புதிதாக ஏழு மாவட்டச் செயலாளர்களையும், மூன்று மாவட்டத் தலைவர்களையும், ஒரு பொருளாளரையும் மாற்றியுள்ளார். இந்த நடவடிக்கைகள் கட்சிக்குள் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், இரு தலைவர்களையும் மீண்டும் ஒன்றிணைக்க வலியுறுத்தி, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களுடன் தைலாபுரம் இல்லத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
"பாமகாவில் பிரிவு வேண்டாம்", "பிரியாத பிரியாத இரு கண்களும் பிரியாதே", "பட்டிதொட்டி எங்கும் பாட்டாளி எங்கள் சின்னையா முதலாளி", "பாட்டாளி என்ற ரயில் பிரிவு நமக்குள் ஏன் இந்த பிரிவு?", "வலியுடன் வாழ்கிறோம் இணை பிரிவிற்கு இன்பத்துடன் இறைவனிடம் வேண்டுகிறோம்" போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை அவர்கள் கையில் ஏந்தியுள்ளனர்.
தற்போது, அவர்களை விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் தைலாபுரம் இல்லத்திற்குள் அழைத்துச் சென்றுள்ளார். இந்த நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.