விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடந்த மே 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
இருப்பினும், இந்தக் கூட்டத்தில் 9 மாவட்ட செயலாளர்களும், 11 மாவட்ட தலைவர்களும் மட்டுமே பங்கேற்றனர். பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உட்பட 82 மாவட்ட செயலாளர்களும், 80 மாவட்ட தலைவர்களும் கூட்டத்தைப் புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, கட்சிக்குள் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்தன. இதனால் கட்சியினர் மத்தியில் தொடர்ந்து குழப்பமான சூழல் நிலவி வந்தது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், திண்டிவனம் தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், தன்னையும் டாக்டர் அன்புமணி ராமதாஸையும் பிரித்து பேசப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவர் கூறியதாவது:
"எனக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே எந்த மனக்கசப்பும் இல்லை. வரும் நாட்களில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் அன்புமணி ராமதாஸ் நிச்சயம் கலந்து கொள்வார். நான் கசப்பான செய்தியை என்றும் சொல்வதில்லை; இனிப்பான செய்தியைத் தான் சொல்வேன். பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கப் போவதாக வதந்திகளை கிளப்பி விடுகிறார்கள்.
அவர்கள் யார் என்பது எனக்குத் தெரியும். பாமக நான் உருவாக்கிய கட்சி. அன்புமணியை நானே கட்சியில் இருந்து நீக்குவேனா? இந்திய அளவில் சமூக நீதியைப் பேசுவது நான் ஒருவன்தான். நான் மட்டும்தான் அதை பேச முடியும். என்னை விட்டால் வேறு யாரும் பேச முடியாது. மற்றவர்களுக்கு அதைப் பற்றித் தெரியாது."
மேலும், தனது உடல்நலம் குறித்த ஐயங்களை நீக்கும் விதமாக, "சிங்கத்தின் கால்கள் பழுதுபடவில்லை; சீற்றமும் குறையவில்லை என நிரூபிக்கவே நேற்று நீச்சல் அடித்தேன்" என்று ராமதாஸ் தெரிவித்தார்.
முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நகைக்கடன் பெற முடியாத நிலை ஏற்படும் என்று டாக்டர் ராமதாஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.