Advertisment

இலவச வேட்டி, சேலை: கைத்தறி நெசவாளர்களுக்கு துரோகம் இழைப்பதா?: ராமதாஸ் கண்டனம்

"கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தின் நோக்கத்தை சிதைத்து கைத்தறியாளர்களுக்கு துரோகம் இழைப்பது கண்டிக்கத்தக்கது." என்று பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
PMK Ramadoss on pongal gift package TN govt Tamil News

"இலவச வேட்டி, சேலை கொள்முதலில் கைத்தறி நெசவாளர்களின் வேலைவாய்ப்பை முற்றிலுமாக பறித்திருக்கும் தமிழக அரசு, இந்த உண்மையை முற்றிலுமாக மறைத்துள்ளது" என்று பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

Advertisment

தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி, சேலைகள் முழுவதையும் ஒட்டுமொத்தமாக விசைத்தறி நெசவாளர்களிடமிருந்து வாங்கவிருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கைத்தறி நெசவாளர்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தின் நோக்கத்தை சிதைத்து கைத்தறியாளர்களுக்கு துரோகம் இழைப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தைத்திங்கள் நாளையொட்டி தமிழக மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு கோடியே 77 லட்சத்து 64,476 புடவைகளும், ஒரு கோடியே 77 லட்சத்து 22,995 வேட்டிகளும் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த வேட்டி, சேலைகள் முழுவதையும் விசைத்தறி நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்ய தமிழக அரசின் கைத்தறி, கைத்திறன் மற்றும் துணிநூல் துறை முடிவு செய்துள்ளது. அதற்காக முதல் கட்டமாக ரூ.100 கோடியை ஒதுக்கீடு செய்து கடந்த 27ம் நாள் அரசாணை பிறப்பித்திருக்கிறது.

வழக்கமாக, பொங்கல் திருநாளுக்கு தேவைப்படும் வேட்டி, சேலைகளின் ஒரு பகுதி கைத்தறி நெசவாளர்களிடமிருந்தும், இன்னொரு பகுதி விசைத்தறியாளர்களிடமிருந்தும் கொள்முதல் செய்யப்படும். கடந்த ஆண்டு தலா 1.73 கோடி வேட்டிகளும், சேலைகளும் வாங்கப்பட்ட நிலையில், ஒரு கோடி வேட்டிகளும், 1.24 கோடி சேலைகளும் மட்டும் தான் விசைத்தறியாளர்களிடமிருந்து வாங்கப்பட்டன. மீதமுள்ள 73 லட்சம் வேட்டிகளும், சுமார் 50 லட்சம் சேலைகளும் கைத்தறி நெசவாளர்களிடமிருந்து தான் வாங்கப்பட்டன. ஆனால், இந்த முறை ஒட்டுமொத்த வேட்டி, சேலைகளை விசைத்தறியாளர்களிடமிருந்து வாங்குவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பது கைத்தறி நெசவாளர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும்.

இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் என்பது அடித்தட்டு மக்கள் நலன் சார்ந்த இரட்டை நோக்கங்களுக்காக 1983ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டதாகும். தமிழர் திருநாளான பொங்கல் நாளில் ஏழை, எளிய மக்கள் புத்தாடை அணிய வேண்டும் என்பது ஒரு நோக்கம் என்றால், நலிவடைந்து வரும் கைத்தறித் தொழிலைப் பாதுகாப்பதும், கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டின் பெரும்பாலான நாட்களில் வேலைவாய்ப்பு வழங்குவதும் இரண்டாவது நோக்கம். காலப்போக்கில் கைத்தறி நெசவாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்ததால், விசைத்தறிகளிடமிருந்தும் வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டன. கடந்த பத்தாண்டுகளாக விசைத்தறிகளிடமிருந்து தான் அதிக வேட்டி, சேலைகள் வாங்கப்பட்டு வருகின்றன என்றாலும் கூட, கைத்தறி நெசவாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படவில்லை. நடப்பாண்டில் தான் முதன் முறையாக கைத்தறியாளர்கள் புறக்கணிக்கட்டுள்ளனர்.

இந்த முடிவால், கைத்தறி நெசவாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஒப்புக்கொண்டுள்ள தமிழக அரசு, அந்த பாதிப்பை ஈடு செய்யும் வகையில், முதியோர் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்படும் வேட்டி, சேலைகளை முழுக்க, முழுக்க கைத்தறி நெசவாளர்களிடமிருந்து வாங்க ஆணையிட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது. இதை விட பெரிய ஏமாற்று வேலையும், மோசடியும் இருக்க முடியாது. கடந்த ஆண்டில் இருந்த நடைமுறையே நடப்பாண்டிலும் பின்பற்றப்பட்டிருந்தால், 73 லட்சம் வேட்டிகள், 50 லட்சம் சேலைகள் என மொத்தம் 1.23 கோடி துணிகளை உற்பத்தி செய்யும் வாய்ப்பு கைத்தறி நெசவாளர்களுக்கு கிடைத்து இருக்கும். ஆனால், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு வகையான ஓய்வூதியம் பெறுவோரின் மொத்த எண்ணிக்கையே 34.90 லட்சம் மட்டும் தான். அதனால், அதிகபட்சமாகவே 35 லட்சம் துணிகள் தான் இம்முறை கைத்தறி நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும். இது கடந்த ஆண்டின் அளவில் வெறும் 28.37 சதவிகிதம் மட்டும் தான். இதனால் கைத்தறி நெசவாளர்கள் பெருமளவில் வேலை இழப்பர்.

இலவச வேட்டி, சேலை கொள்முதலில் கைத்தறி நெசவாளர்களின் வேலைவாய்ப்பை முற்றிலுமாக பறித்திருக்கும் தமிழக அரசு, இந்த உண்மையை முற்றிலுமாக மறைத்து விட்டு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி,''இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், கைத்தறி மற்றும் பெடல்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளுக்கு இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது'' என்று அப்பட்டமான பொய்யை அந்த செய்திக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. கைத்தறி நெசவாளர்களிடமிருந்து ஒரு வேட்டி, சேலை கூட வாங்காமல், அனைத்து வேட்டி, சேலைகளும் கைத்தறி மற்றும் பெடல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதாக தமிழக அரசு கூறியிருப்பது தமிழ்நாட்டு மக்களை தவறாக வழி நடத்தும் செயலாகும். இதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.

விசைத்தறியாளர்கள், கைத்தறி நெசவாளர்கள் ஆகிய இரு தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், ஒரு தரப்பினரின் நலன்களை புறக்கணித்து விட்டு, இன்னொரு தரப்பினரின் நலன்களை பாதுகாக்கக் கூடாது. இது பெரும் தவறாகும். எனவே, இலவச வேட்டி, சேலை தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்து விட்டு, கடந்த ஆண்டைப் போலவே கைத்தறி நெசவாளர்களிடமிருந்து குறைந்தது மூன்றில் ஒரு பங்கு வேட்டி, சேலைகளையாவது கொள்முதல் செய்யும் வகையில் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Dr Ramadoss Tamil Nadu Govt
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment