பாட்டாளி மக்கள் கட்சியில் அதன் நிறுனத் தலைவர் ராமதாஸ் - மகன் அன்புமணி இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தனது மகள் வழிப்பேரரான முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக ராமதாஸ் அறிவித்த நிலையில், அதற்கு அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் . இதன்பின்னர், கூட்டணி விவகாரம், கட்சி செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அன்புமணி மீது தொடர்ந்து ராமதாஸ் அதிருப்தி அடைந்தார்.
இதன் காரணமாக, பா.ம.க தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு, அவரை செயல் தலைவராக நியமித்தார். இதனைத் தொடர்ந்து நடந்த வன்னியர் மாநில மாநாட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பா.ம.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு போன்றவை ராமதாஸ் - அன்புமணி இடையே இருந்த விரிசலை அதிகப்படுத்தும் விதமாக அமைந்தது.
கடந்த மே மாத இறுதியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ராமதாஸ் அன்புமணி மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதன்பிறகு, அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். ஆனால், அவரது நீக்கம் செல்லாது என அன்புமணி அறிவித்தார். இந்தப் பதவி நீக்கப் படலம் தொடர்ந்த நிலையில், பொதுக்குழுவை கூட்டுவது பற்றி இருவரும் மாறி மாறி அறிக்கை விட்டனர். புதுச்சேரியில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அன்புமணி அறிவித்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக, தனது இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது அன்புமணிதான் என குற்றம் சாட்டி இருந்தார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். மேலும், உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த மகனாக இவராகவே இருக்க முடியும் என்றும் அவர் விமர்சித்து இருந்தார். இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டு இருப்பதாகவும், வைபை மூலம் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டு உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாசின் தொலைபேசி வைபை மூலம் சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகார் மனு கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தொலைபேசியை வைபை மூலம் சட்டவிரோதமாக ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.