Advertisment

2 ஆண்டுக்கு முந்தைய அறிவிப்பு... மாவட்டம் தோறும் சூரிய மின் உற்பத்தி பூங்கா என்ன ஆச்சு? ராமதாஸ் கேள்வி

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வரும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது என்ன ஆச்சு என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Ramadoss condemns TN fishermen attacked in Sri Lankan prison Tamil News

டாக்டர் ராமதாஸ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வரும் நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது என்ன ஆச்சு என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் விடுத்து இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 50 மெகாவாட் திறன்கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில் இன்று வரை ஒரு மாவட்டத்தில் கூட சூரிய ஒளி பூங்கா அமைக்கப்படவில்லை. தமிழ்நாட்டை சூரியஒளி மின்னுற்பத்தியில் முதன்மை மாநிலமாக மாற்ற அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

காற்றாலை மின்னுற்பத்தியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டை சூரிய ஒளி மின்னுற்பத்தியிலும் முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்று -பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. 2021-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த தி.மு.க, தமிழ்நாட்டில் 6000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்திட்டங்கள் அடுத்த இரு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்; அவற்றில் 2000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தித் திட்டங்களை தமிழ்நாடு மின்சார வாரியமே நேரடியாக செயல் படுத்தும்; இதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது 50 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அரசு அறிவித்தது.

ஆனால், அதன்பின் இரு ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், தமிழகத்தின் எந்த மாவட்டத்திலும் சூரியஒளி மின்னுற்பத்தி பூங்கா அமைக்கப்படவில்லை. திருவாரூர் மாவட்டத்தில் தான் முதலாவது சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்கா அமைக்கப்படும் என்று அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்திருந்தார். ஆனால், அம்மாவட்டத்தில் அதற்கான தொடக்கக்கட்ட பணிகள் கூட நடைபெறவில்லை.

ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்கா அமைக்க குறைந்தது 4 முதல் 5 ஏக்கர் நிலம் தேவை. 50 மெகாவாட் சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்கா அமைக்க 200 முதல் 250 ஏக்கர் நிலம் தேவைப்படும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளில் 100 ஏக்கர் நிலங்களை மட்டுமே திருவாரூர் மாவட்ட நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது. மீதமுள்ள நிலங்களையும் அடையாளம் கண்டு அங்கு சூரியஒளி மின்னுற்பத்தி பூங்காவை அமைப்பது சாத்தியமற்ற ஒன்றாகும்.

திருவாரூர் மாவட்டத்தில் தான் இந்த நிலைமை என்று இல்லை. வடக்கில் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி, தெற்கில் கன்னியாகுமரி வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சூரிய ஒளி மின்னுற்பத்தி பூங்கா அமைக்கும் திட்டம் அறிவிப்பாகவே உள்ளது. சூரிய ஒளி மின்னுற்பத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் படுதோல்வியடைந்து விட்டது என்பது தான் உண்மை. இந்தியாவில் ராஜஸ்தானுக்கு இணையாக தமிழ்நாட்டிலும் அனைத்து மாவட்டங்களிலும் சூரிய ஒளி ஆதாரம் அளவுக்கு அதிகமாக உள்ளது.

ஆனால், அந்த ஆதாரத்தை பயன்படுத்தி ராஜஸ்தான் மாநிலம் 18 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்னுற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் சூரிய ஒளி மின்னுற்பத்தித் திறன் அதில் மூன்றில் ஒரு பங்காக, அதாவது 6539 மெகாவாட் என்ற அளவிலேயே உள்ளது. சூரிய ஒளி மின்னுற்பத்தியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவெடுத்திருக்க வேண்டிய தமிழ்நாடு, இப்போது ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.

இதற்குக் காரணம் சூரிய ஒளி மின்னுற்பத்தித் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என்பது தான். 2030 ஆம் ஆண்டுக்குள் 20,000 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்திட்டங்கள் அமைக்கப்படும்; அதற்காக ரூ.70,000 கோடி செலவிடப்படும் என்றும் 2021 ஆம் ஆண்டில் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இந்தத் திட்டமும் அறிவிப்புடன் தான் நிற்கிறது. இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் சார்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை என்பது தான் உண்மையாகும்.

உலகப் போர்களை விட மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் நிகழ்வாக காலநிலை மாற்றம் உருவாகி வருகிறது. அதனால் ஏற்படக்கூடிய பேரழிவுகளுக்கான முன்னோட்டங்கள் உலகம் முழுவதும் நிகழ்ந்து வருகின்றன. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தடுப்பதற்காக உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்படும் முதன்மைத் தீர்வு நிலக்கரியை எரிபொருளாகக் கொண்ட அனல் மின்நிலையங்களை மூடி விட்டு, தூய்மை மின்சாரத்தை தயாரிக்கும் சூரிய ஒளி மின்திட்டம், காற்றாலை மின்திட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவது தான்.

புவிவெப்பமயமாதலின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்த 2040 ஆம் ஆண்டிற்குள் கரிமச் சமநிலை (Zero Carbon Emission) கொண்ட மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்காக சூரிய ஒளி மின்திட்டங்கள், காற்றாலை மின்திட்டங்கள் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும். எனவே, தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்ட சூரிய ஒளி மின்திட்டங்களின் செயல்பாட்டை அரசு விரைவுபடுத்த வேண்டும். அதற்காக சூரிய ஒளி, காற்றாலை உள்ளிட்ட மரபுசாரா எரிசக்தித் திட்டங்களை செயல்படுத்த வசதியாக புதிய எரிசக்தித் துறை என்ற பெயரில் தனி அமைச்சகத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dr Ramadoss
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment