பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே மோதல் நீடித்து வரும் சூழலில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் பாமக செயற்குழு இன்று (ஜூலை 8) கூடியது.
Advertisment
இந்தச் செயற்குழுக் கூட்டத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலாளர் முரளிசங்கர், இணை பொதுச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான அருள், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி, பாமக முன்னாள் மாநிலத் தலைவர் தீரன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். மேடையில் வைக்கப்பட்ட பேனரில், அன்புமணி பெயரோ, படமோ இடம்பெறவில்லை.
இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அன்புமணி ராமதாஸ்க்கு எதிராகவும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முக்கிய அம்சமாக இந்த செயற்குழு கூட்டத்தில் ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தியும் வந்திருந்தார். கூட்டம் துவங்கியபோது, திடீரென பாமக நிர்வாகிகள் அவரை அழைத்து மேடையில் அமர வைத்தனர்.
Advertisment
Advertisements
கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ. அருள்; ’பொதுவாகவே, ஆணை விடப் பெண்கள் உயர்ந்தவர்கள் என்று பெரியவர்கள் கூறுவதுண்டு. ஒரு தந்தைக்கு மனவருத்தம் ஏற்படும்போது, ஒரு பெண் சிங்கம் போல எழுந்து துணை நிற்பாள் என்பது அனுபவ உண்மை. தற்போது நம் மரியாதைக்குரிய மருத்துவர் ஐயாவுக்கு ஏற்பட்டிருக்கும் மனவலியைப் போக்க, 24 மணி நேரமும் தனது தந்தையுடன் உடனிருந்து, அன்புடன் அரவணைக்கும் ஸ்ரீகாந்தி அக்காவுக்கு முதலில் எனது அன்பான வணக்கங்கள்.
மருத்துவர் ஐயாவின் முதுகெலும்பு என்று ஸ்ரீகாந்தி அக்காவையே சொல்லலாம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பேட்டியில், "உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு யாருக்கு மிகவும் பிடித்திருக்கிறது?" என்று கேட்டபோது, "எனது மூத்த மகள் ஸ்ரீகாந்தி" என்று மருத்துவர் ஐயா குறிப்பிட்டிருக்கிறார். அன்று அவர் சொன்ன வார்த்தைகள் இன்று உண்மையாகியிருக்கின்றன.
1988-ம் ஆண்டு நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, என் அப்பா என்னை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அப்போது சேலம் நான்கு ரோடு பகுதியில், நூற்றுக்கணக்கான கார்கள் புடைசூழ மருத்துவர் ஐயா வந்துகொண்டிருந்தார். மக்களைப் பார்த்து கையசைத்துக்கொண்டே வந்த அவர், ரத்தினம் வீட்டுக்கருகே நாங்கள் நின்றிருந்தபோது, என்னைக் கண்டு வணங்கினார். அன்றைக்கு அவர்மீது நான் கொண்ட பக்தி, இன்றுவரை 36 ஆண்டுகளாக அவரது காலடியில் என்னை வைத்திருக்கிறது.
நான் எம்.எல்.ஏ. பதவியையோ, எம்.பி. பதவியையோ ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. ஐந்து முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எனக்கு அவரே வழங்கினார்.
"இவன் பின்னால் போ!" என்று ஐயா சொன்னால், நாங்கள் அதைப் பின்பற்றத் தயாராக இருக்கிறோம். "நீங்கள் என்னை மேயர் ஆக்கினீர்கள், எம்.எல்.ஏ. ஆக்கினீர்கள், பல பதவிகளைக் கொடுத்தீர்கள், மாவட்ட செயலாளர் ஆக்கினீர்கள், இன்று இணைப் பொதுச்செயலாளர் என்ற பெரிய பதவியைக் கொடுத்திருக்கிறீர்கள். என்னை எம்.எல்.ஏ. ஆக்கினீர்கள்." ஆனாலும், இந்த மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை விட, இட ஒதுக்கீடு ஒன்றே ஐயா விரும்பியது. அதற்காகவே அவர் உழைத்தார்.
என்னை கட்சியிலிருந்து நீக்குவதற்கோ, எனது பொறுப்பை மாற்றுவதற்கோ முழு அதிகாரம் படைத்த ஒரே தலைவர் மருத்துவர் ஐயா அவர்கள்தான்! "நீ கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டாம், அருளு! உன் உயிர் எனக்கு வேண்டும்" என்று இப்போது சொன்னால், இந்த தொலைக்காட்சி கேமராக்கள் முன்னால் எனது கழுத்தை அறுத்துச் சாக நான் தயாராக இருக்கிறேன். எனது தலைவர், என் உயிருள்ளவரை, என் மகன் இருக்கும்வரை, என் குடும்பம் இருக்கும்வரை, மருத்துவர் ஐயா அவர்களே, நீங்கள் மட்டுமே!' இவ்வாறு அருள் எம்.எல்.ஏ உணர்ச்சிபொங்க பேசினார்.