பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழல் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் விரிவடைந்து கொண்டே செல்கிறது. அதேநேரத்தில் இந்த ஊழலில் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் உமா உள்ளிட்ட சிலர் மீது மட்டும் பெயரளவில் நடவடிக்கை எடுத்து விட்டு, மற்றவர்களைக் காப்பாற்ற சதி நடப்பதாகத் தோன்றுகிறது. இந்த முயற்சி கண்டிக்கத்தக்கது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழல் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பே, அதுகுறித்து பல்கலைக்கழக உள்விசாரணைக்கு ஆணையிட்டு இருந்ததாக பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா கூறியிருக்கிறார். விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலை முழுமையாக வெளிக்கொண்டு வந்து, இனிவரும் காலங்களில் இத்தகைய ஊழல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என்பது தான் துணைவேந்தரின் நோக்கம் என்றால் அது வரவேற்கத்தக்கது தான். ஆனால், இந்த ஊழல் தொடர்பாக துணைவேந்தர் சுரப்பா கூறியுள்ள வேறு சில தகவல்கள் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டதாக உள்ளது.
கடந்த காலங்களில் பொறியியல் படித்து, தேர்ச்சி பெற முடியாதவர்கள் தான் முகவர்கள் மூலம் பணம் கொடுத்து தேர்ச்சி பெற முயல்வதாகவும், அது தான் இத்தகைய ஊழலுக்கு காரணம் என்றும் சுரப்பா கூறியிருக்கிறார். இது தான் மிகவும் ஆபத்தான கருத்து ஆகும். இதன்மூலம் இப்போது பொறியியல் பயிலும் மாணவர்கள் எவரும் இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடவில்லை; தனியார் பொறியியல் கல்லூரிகள் இத்தகைய மோசடிகளில் ஈடுபடவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்த துணைவேந்தர் முயல்கிறார். இது இந்த விசாரணையை திசை திருப்பும் செயலாகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் 3.02 லட்சம் பேர் மறுமதிப்பீடு கோரியுள்ளனர். இவர்களில் தேர்ச்சியும், கூடுதல் மதிப்பெண்களும் பெற்ற சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களில் பெரும்பகுதியினர் கல்லூரிகளில் இப்போது படித்துக் கொண்டிருப்பவர்கள் என்பதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. அவ்வாறு இருக்கும் போது, 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு படித்து தேர்ச்சி பெறாதவர்கள் தான் இந்த மோசடிக்கு காரணம் என்பதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும். கடந்த 7 ஆண்டுகளில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சம் என்றும், அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 20 லட்சம் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு பேரும் பழைய மாணவர்கள் என்பது முழுப் பூசணிக்காயை அல்ல.... இமயமலையையே சோற்றில் மறைக்கும் செயலாகும். விசாரணையை திசை திருப்பும் வகையில் இத்தகைய கருத்துகளை சுரப்பா கூறக்கூடாது.
விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழலைப் பொறுத்தவரை அண்ணா பல்கலைக்கழக நிர்வாக அமைப்பில் பல்வேறு நிலைகளில் இருந்தவர்களுக்கும், இப்போது இருப்பவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்பது தான் பல்வேறு தரப்பினரின் குற்றச்சாற்று ஆகும். இம்முறைகேடுகளுக்கு உயர்கல்வித்துறை செயலாளர், அமைச்சர் ஆகிய பதவிகளில் இருந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்கும் தொடர்பு உள்ளது. ஆகவே, இவர்களை ஒதுக்கிவிட்டு விசாரணை நடத்தப்பட்டால் அது இந்த ஊழலில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றும் செயலாகவே அமையும். இது மறுமதிப்பீட்டு ஊழலை ஒழிக்க எந்த வகையிலும் உதவாது.
அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீட்டு ஊழலை கையூட்டுத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் நிலையில் உள்ள பெண் அதிகாரி ஒருவர் தான் விசாரித்து வருகிறார். அவரின் திறமை குறித்தோ, நேர்மை குறித்தோ எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால், மிகவும் சிக்கலான இந்த ஊழல் குறித்த புலனாய்வு விசாரணையைக் கையூட்டுத் தடுப்புப் பிரிவால் மட்டும் மேற்கொள்ள முடியாது. விடைத்தாள் திருத்தும் நடைமுறையும், அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி கூடுதல் மதிப்பெண் மோசடி நடந்த விதமும் மிகவும் சிக்கலானவை ஆகும். இதில் உள்ள நுணுக்கங்கள் கல்வியாளர்கள் மற்றும் கல்வி சார்ந்த நிர்வாகத்தில் உள்ளவர்களாலும் மட்டுமே புரிந்துக்கொள்ளக் கூடியவை ஆகும். இவற்றை முழுமையாக புரிந்து கொண்டு, விசாரணை நடத்தினால் மட்டுமே இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்க முடியும். இல்லாவிட்டால் குற்றவாளிகள் தப்பித்து விடும் ஆபத்து உள்ளது.
எனவே, விடைத்தாள் மறுமதிப்பீட்டு ஊழல் வழக்கை கையூட்டுத் தடுப்புப் பிரிவின் மூத்த அதிகாரிகள், உயர்கல்வித்துறை வல்லுனர்கள், கல்வி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அடங்கிய பல்துறை வல்லுனர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். விசாரணை முடிவடையும் வரை இதில் தொடர்புடைய உயர்கல்வித்துறை உயரதிகாரிகளை பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்." என்று ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.