காவிரி தொடர்பான அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவு - ராமதாஸ்

காவிரிப் பிரச்சினை தொடர்பாக நடத்தப்படும் அனைத்துப் போராட்டங்களையும் பாமக ஆதரிக்கும்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டும், அதை செயல்படுத்த மத்திய அரசு மறுத்து விட்டது. அதுமட்டுமின்றி, காவிரிப் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதை தாமதப்படுத்தும் நோக்கத்துடன், காவிரி மேலாண்மை வாரியத் தீர்ப்புக்கு விளக்கம் கோரும் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

உலகக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டி இறுதி ஆட்டத்தில் பந்து வீசும் அணிக்கு ஆதரவாக நடுவரே களமிறங்கி விளையாடுவது எந்த அளவுக்கு அநீதியோ, அதைவிட பெரிய அநீதியை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக கர்நாடகத்துக்காக வழக்குத் தொடர்ந்து நடத்தி வருவதன் மூலம் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைக்கிறது. உச்சநீதிமன்றத்திற்கு விரைவில் கோடை விடுமுறை வருவதால், இந்த வழக்குகளின் விசாரணை உடனடியாக முடிவடைவதற்கு வாய்ப்பில்லை. இதனால் அடுத்த குறுவைப் பருவத்திற்கும் காவிரி நீர் கிடைக்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகிறது.

காவிரிப் பிரச்சினையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு சாதகமாக மத்திய அரசு செய்யும் துரோகங்கள் மன்னிக்க முடியாதவை. மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தில் வெடித்துள்ள போராட்டங்கள் தான் மத்திய அரசுக்கு தமிழகத்தின் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் வரை இப்போராட்டங்கள் உறுதி குறையாமல் தொடர வேண்டும். அதற்குத் தேவையான ஆதரவை வழங்க பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இப்போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி அந்த அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல், வரும் 5ஆம் தேதி திமுக கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடத்தப்படவுள்ள பொதுவேலை நிறுத்தத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவைக் கேட்டு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர்களின் வேண்டுகோள்களை ஏற்று நாளை நடைபெறவுள்ள கடையடைப்புப் போராட்டத்திற்கும் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுவேலைநிறுத்தத்திற்கும் பா.ம.க ஆதரவு அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி உரிமைகளை மீட்பதற்கு அரசியல் தடையாக இருக்கக் கூடாது என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதை மதித்து காவிரிப் பிரச்சினை தொடர்பாக நடத்தப்படும் அனைத்துப் போராட்டங்களையும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கும்” என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close