/indian-express-tamil/media/media_files/2024/12/30/FZkdzdGa7F6r3XWvNt0b.jpg)
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழர்களின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பறைச்சாற்றும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் பொங்கல் பண்டிகை தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும்.
அந்த வகையில் மக்கள் தங்கள் வீடுகளில் பொங்கல் வைத்து பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் அறிவிக்கப்பட வில்லை.
இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025-ம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி பரிசுத் தொகுப்பை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அதில் ஒரு கிலோ அரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், திமுக ஆட்சியில் கடந்த இரு ஆண்டுகளாக பொங்கல் பரிசுத் தொகுப்பில் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 இந்த முறை காணாமல் போயிருக்கிறது. மக்களை ஏமாற்றும் வகையிலான இந்த அறிவிப்பு கண்டிக்கத்தக்கது.
நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்பன போன்ற காரணங்களைக் கூறி மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக்கூடாது. மத்திய அரசிடமிருந்து பெற வேண்டிய நிதியை போராடியோ, நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தோ பெற வேண்டியது மாநில அரசின் கடமை.
அந்தக் கடமையிலிருந்து தவறியதற்காக மக்களை தமிழக அரசு தண்டிப்பது நியாயமற்றது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்களுக்கு கூடுதலாக உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதும், ஆட்சிக்கு வந்த பின்னர் உதவி வழங்க மறுப்பதும் திமுகவின் இரட்டை வேடம் ஆகும்.
கடந்த சில மாதங்களில் பெய்த கடுமையான மழையாலும், வெள்ளத்தாலும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் மக்கள் பொங்கலை ஓரளவாவது மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.
இதை உணர்ந்து நடப்பாண்டுக்கான பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 சேர்த்து வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.