/indian-express-tamil/media/media_files/2025/04/14/3jj2wmFRWN2UkrinBiys.jpg)
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குறித்து அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா கூறியது கண்டனத்திற்குரியது என்று, அக்கட்சி பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில், "பாட்டாளி மக்கள் கட்சியின் அண்மை நிகழ்வுகள் பற்றிக் கட்சியின் பொருளாளராக இருக்கும் திருவாட்டி. திலகபாமா என்பார் கூறுகையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் எல்லா நிலைகளிலும் சரியான முடிவெடுத்துச் சரியான செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவார். இப்போது தவறான முடிவெடுத்து இருக்கிறார். இது ஒரு ஜனநாயகப் படுகொலை என்று சிறிதும் பொருளற்ற முறையில் சிறுபிள்ளைத் தனமாக அய்யா அவர்கள் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பா.ம.க-வின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மேற்கொண்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாதவர்.
திலகபாமா பாட்டாளி மக்களின் தோழர் அல்லர்; மேட்டுக்குடியினம். பெண்களுக்குத் தலைமையில், அதுவும் பொருளாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று அய்யாவின் பரிந்துரையிலும், ஆதரவிலும் பதவி பெற்றவர். பல மாவட்டங்களில் பல ஆண்டுகளாக பாடுபட்டு வந்த பாட்டாளி சொந்தங்களை விரட்டி அடித்தவர். உடனிருந்தே கொள்ளும் நோய் இவர்.
அரசியல் என்னவென்றே தெரியாத அரைவேக்காடு இவர். பாட்டாளிகளின் உயிரியக்கமான பா.ம.க-வை அழிப்பதற்காக வெளியில் இருந்து கட்சிக்குள் புகுந்த நோய்க்கிருமி. தமிழகத்திலேயே – ஏன், இந்தியாவிலேயே ஜனநாயகப் பண்புள்ள ஒரே கட்சி பா.ம.க. ஜனநாயக மரபுகளையும், சமூக நீதிக் கோட்பாட்டினையும் கட்சிக்குள்ளே பேணிக் காத்து வரும் ஒரே தலைவர் வழிகாட்டி மருத்துவர் அய்யா அவர்கள். அரசியல் கட்சிகள் கடந்து அனைவராலும் பாராட்டப்பெறும் ஒரே தலைவர்.
அவர் விடுக்கும் அறிக்கைகளே அனைவருக்கும் அரசியல் அகரமுதலி. மாமனிதர் மருத்துவர் அய்யாவை ஜனநாயகப் படுகொலை செய்தவர் என்று நெஞ்சிலே வஞ்சக எண்ணத்தோடு சொற்களை அள்ளி வீசிய திலகபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறேன். பல்வேறு மாநில பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றி வந்த நான் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறேன்.
நெஞ்சிலே கொஞ்சமும் நன்றியுணர்ச்சி இன்றி மருத்துவர் அய்யா அவர்களை வசை பாடி இருக்கும் திலகபாமா உடனடியாக கட்சியிலிருந்து வெளியேறி விடுவது தான் அவருக்கு நல்லது. தி.மு.க தலைவர் கலைஞர் போன்றவர்களே தைலாபுரத்திலிருந்து எப்போது தைலம் வரும் என்று காத்திருக்கையில், நேற்று முளைத்த காளான்கள் அய்யாவை வசை பாடுவது தான் பேரவலம்.
மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசுகள் எதுவாயினும், கூட்டணி கட்சியே என்றாலும் ஆட்சியாளரின் தவறான போக்குகளையும், ஆட்சியின் குறைபாடுகளையும் ஏமரா மன்னனை இடித்துரைக்கும் சான்றோனாக விளங்கி வரும் மருத்துவர் அய்யா அவர்களை, நேற்றுக் கட்சிக்குள் வந்த திலகபாமா வசைபாடி மகிழ்வதை விடுத்து, தான் கூறியவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்படியே கட்சியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.