pmk vanniyar protest : வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு தர வலியுறுத்தி சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பாமக தொண்டர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் முன்பு பாமக சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது பாமக, வன்னியர் சங்கத்தின் கோரிக்கை.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு இன்று காலை 11 மணிக்கு போராட்டம் தொடங்கியது. போராட்டத்துக்கு வந்த பிற மாவட்ட பாமகவினர் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் பாமகவினர் சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை சென்னை எல்லையான பெருங்களத்தூர் சோதனைச்சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். சோதனைக்கு பின்பு சிலர் திருப்தி அனுப்பட்டனர். இதனால் கோபமடைந்த தொண்டர்கள் பெருங்களத்தூர்- ஜிஎஸ்டி நெடுச்சாலையின் இரு புறமும் திரண்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட தொடங்கினர். இதனால் பெருங்களத்தூரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த போராட்டம் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த டாக்டர் ராமதாஸ், சென்னையில் நடைபெறவிருக்கும் போராட்டத்தில் லட்சக்கணக்கில் பாட்டாளிகள் பங்கேற்க வேண்டும். நாம் நமது உரிமைக்காகவே போராடுகிறோம் என கூறி இருந்தார்.
சென்னையில் பாமகவினர் போராட்டம் தொடரும் நிலையில் புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரை- தாம்பரம் இடையேயான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் மறியலில் ஈடுபட்டு வரும் பாமகவினர் ஆங்காங்கே கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”