தமிழகத்தில் வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது எனவும், அதனால், மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும் எனவும் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, வியாழக்கிழமை அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,
”தமிழ்நாட்டில் டெங்குக் காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. டெங்குக் காய்ச்சல் 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இரு மாதம் முடிவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அது நடக்கவில்லை. மாறாக டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியிருப்பது கவலையளிக்கிறது.
தமிழகத்தில் 5 மாதங்களுக்கு முன்பாக கடந்த ஜூன் மாத இறுதியிலேயே தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கி விட்டது. அக்காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ நடவடிக்கைகளையும், டெங்கு பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் 10-ஆம் தேதியே அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதன்பின்னர் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி, பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் 20 மாவட்டங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்களும் நடத்தப்பட்டன. ஆனால், தமிழக ஆட்சியாளர்களோ காய்ச்சலைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.
டெங்குக் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய போதெல்லாம் அம்மாவின் ஆட்சி நடக்கும் தமிழகத்தில் நுழையும் துணிச்சல் டெங்குக் காய்ச்சலுக்கு இல்லை என்று ஆட்சியாளர்கள் வீரவசனம் பேசினார்கள். ஆனால், அதையும் தாண்டி கிராமப்புறங்களில் காய்ச்சல் வேகமாக பரவிய நிலையில், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி சேலம் மருத்துவமனையில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் அடுத்த 10 நாட்களில் டெங்குக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும் என்று கூறினார். டெங்கு போன்ற எந்தக் காய்ச்சலையும் கட்டுப்படுத்தி ஓட ஓட விரட்டச்செய்யும் வல்லமை அம்மா அரசுக்கு உண்டு என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.
ஆனால், அமைச்சர் அவ்வாறு கூறி இரு மாதங்களாகி விட்ட நிலையில் தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திலிருந்து 13 ஆயிரமாக அதிகரித்து விட்டது. அதேபோல், உயிரிழந்தோரின் எண்ணிக்கை முப்பதிலிருந்து 90 ஆக உயர்ந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, நேற்று மாலையுடன் முடிவடைந்த 48 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். புதுக்கோட்டை, சேலம், காஞ்சி, திருவள்ளூர், திருப்பூர், கோவை, மதுரை, நெல்லை, நாகை, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
டெங்கு நிலைமை இந்த அளவுக்கு கைமீறிப் போய்விட்ட நிலையில் தான், தமிழக ஆட்சியாளர்கள் சென்னையில் தானியில் சென்று நிலவேம்பு கசாயம் கொடுக்கும் திட்டத்தையும், கொசு ஒழிப்புக்காக ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும் திட்டத்தையும் தொடங்கியுள்ளது. டெங்கு ஒழிப்பில் தமிழக அரசு எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதை இத்தகைய நடவடிக்கைகளிலிருந்தே அறியலாம். தில்லியிலிருந்து பேருந்திலும், தொடர்வண்டிகளிலும் குளிரூட்டிகளில் பதுங்கி வந்த கொசுக்களால் தான் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவுவதாக காரணம் கூறும் அதிபுத்திசாலிகளை மக்களவை உறுப்பினர்களாகவும், அதிகாரிகளாகவும் கொண்டுள்ள வரை தமிழகத்தில் இத்தகைய அவலங்கள் தொடரும்.
தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் குறித்து ஆய்வு செய்த இந்திய பொது சுகாதார சங்கம், தமிழகத்தில் 12,500 பேர் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறிந்துள்ளது. மருத்துவ அவசர நிலையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அச்சங்கம் கூறியுள்ளது. மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்துவதன் மூலம் நோய்த்தடுப்பு நடவடிக்கைக்கு கூடுதல் நிதியையும், மருத்துவர்களையும் பெற முடியும். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு இந்திய பொதுசுகாதார அமைப்பு பரிந்துரைத்த போதிலும் ஆட்சியாளர்கள் அதை கண்டுகொள்ளவில்லை.
இதேநிலை தொடர்ந்தால் தமிழகத்தில் டெங்கு உயிரிழப்புகள் தான் அதிகரிக்குமே தவிர நோய்த் தடுப்பில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டு விடாது. எனவே, மருத்துவ வல்லுனர்களின் பரிந்துரைப்படி மருத்துவ அவசர நிலையை பிரகடனப்படுத்தி டெங்குகாய்ச்சலை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்.”, என தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.