கோவை சின்மயா வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த மாணவி சில நாட்களுக்கு முன்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெற்றோர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக மாணவி எழுதிய கடிதம் ஒன்றும் சிக்கியது.
ஆர்.எஸ்புரம் காவல்நிலையத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. முதலில் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனை காவல் துறையினர் கைது செய்தனர்.
இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்விவகாரம் முதல்வர் மு.க ஸ்டாலின் உட்பட பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த சம்பவத்தை பல்வேறு யூடியூப் சேனல்கள் பதிவு செய்துள்ளன. அவர்கள், மாணவியின் பெயர், அவரது குடும்பத்தினர் அவர் வசித்த வீடு உள்ளிட்ட அடையாளங்களை வெளியிட்டன.
ஆனால், போக்சோ சட்டத்தின் கீழ் 18 வயதிற்கு குறைவான சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகும் போது அவர்கள் குறித்த அடையாளங்களை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அவ்வாறு வெளியிடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடியும்.
இதனை சுட்டிக்காட்டி, மாணவியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் 48 யூடியூப் சேனல்கள் மீது போக்சோ சட்டம் 23(2) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil