தமிழகத்தில் காவிரி தொடர்பான போராட்டம், ஒவ்வொரு நாளும் நடந்து வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே.சூரப்பா என்ற கல்வியாளரை, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமித்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
காவிரி விவகாரம் என்பதைத் தாண்டி, தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களை துணை வேந்தர்களாக நியமனம் செய்வது தான் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
இவர் மட்டுமல்ல, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சூரியநாராயண சாஸ்திரி, ஆந்திராவை சேர்ந்தவர். தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரமிளா தேவி, கேரளாவைச் சேர்ந்தவர். அந்த வகையில் எம்.கே.சூரப்பா, தமிழக பல்கலைக்கழகத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள 3-வது வெளிமாநில கல்வியாளர் ஆவார்.
இதுகுறித்து பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார், "ஆளுநர் தனது அதிகாரத்துக்குட்பட்டு துணை வேந்தரை நியமித்துள்ளார். இதில் தமிழக அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டரில், "இந்தியாவின் பிரதமர் பதவிக்குத்தான் ஒரு தமிழருக்கு வாய்ப்பில்லை. துணைவேந்தர் பதவிக்குமா ஒரு தமிழருக்குத் தகுதியில்லை? இதுபோன்ற செயல்களெல்லாம் தமிழகத்தைத் தனிமைப்படுத்தவா? தனிப்படுத்தவா?" என்று கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.