கோவை வெள்ளலூரில் உள்ள பெரியார் ஆய்வு மையம் எதிரே இருந்த, பெரியாரின் உருவச் சிலை ஞாயிற்றுக்கிழமை சேதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
சிலைக்கு ஒரு ஜோடி செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, காவி நிற பொடி பூசப்பட்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தர். இதையறிந்த திராவிடர் கழக நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து, சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.
வலசாரி தீவிரவாதிகள் தான் இதற்கு காரணம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்களும் தகுந்த பதிலடி கொடுக்கலாம், ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்க விரும்பவில்லை,'' என திராவிட கழக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கூறினார்.
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, காந்திபுரத்தில் உள்ள பெரியார் ஆய்வு மையம் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள், பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“சமீபத்தில் விளாங்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஆர்எஸ்எஸ் கழகம் நடத்தப்பட்டதற்கு எதிராக தி.க மற்றும் பிற அமைப்புகள் போராட்டம் நடத்தியது. எனவே இச்சம்பவத்தில் வலதுசாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்,” என்றார் ராமகிருஷ்ணன்.
போத்தனூர் காவல் ஆய்வாளர் நடேசன் மற்றும் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். பிறகு காவல்துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் சிலையிலிருந்த செருப்புகளை அகற்றி சிலையை சுத்தம் செய்தனர். இதுதொடர்பாக 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல், நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல்) மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், குற்றவாளிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குற்றவாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள மூன்று சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பெரியால் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில் ”ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது” என்று தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்புத்தூர் வெள்ளலூரில் தந்தை பெரியார் சிலைக்கு கயவர்கள் செருப்பு மாலை போட்டுள்ளனர். தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படும் கயமைத்தனம் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருந்தது. குற்றவாளிகள்மீதான நடவடிக்கைகள், தண்டனைகள் என்பது மிகவும் மெத்தனமாகவே நடப்பது என்பது, கயவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்து வருகிறது.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முக்கியமாக இதில் கவனம் செலுத்தி, காவல்துறையை முடுக்கிவிட்டு குற்றவாளிகள், அதன் பின்னணியில் இருப்பவர்கள் மீதான நடவடிக்கை, தண்டனையை சரியான வகையில் எடுத்து விரைவுப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர் என்ற நிலை உருவாகும்போதுதான், இதற்கொரு முடிவு எட்டப்பட முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“