விழுப்புரத்தில் ஒரே மாதத்தில் 6 ஆயிரத்து 232 மதுபாட்டில்களை நூதன முறையில் கடத்திய நபர்களை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு பின்னர், விழுப்புரம் மாவட்டம் மதுவிலக்கு போலீசாருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, கடந்த மாதத்தில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம் மற்றும் விக்கிரவாண்டி ஆகிய உட்கோட்டங்களில் சிறப்பு மதுவிலக்கு வேட்டை நடத்தப்பட்டது. இதில் நான்கு சக்கர வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை பிரத்தியேகமாக வடிவமைத்து மதுபாட்டில்கள் கடத்தியது கண்டறியப்பட்டது. இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்த வகையில், கடந்த மாதம் மட்டும் விழுப்புரத்தில் மதுபானம் கடத்தியதாக 221 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், 198 பேர் கைது செய்யப்பட்டு, 107 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வழக்குகளில் 28 லிட்டர் பாண்டி மில்லி, 6232
மதுபான பாட்டில்கள் மற்றும் 71 லிட்டர் கள்ளு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், 26 இரு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம் மற்றும் 6 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தமாக 33 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்டால், இதற்காக வாகனங்களை மாற்றியமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி - பாபு ராஜேந்திரன்